

தாம்பரத்தில் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடும் பணியை உலக சுகாதார நிறுவன அலுவலர் ஆய்வு செய்தார்.
9 மாதம் முதல் 15 வயதுக்குட் பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடும் பணி கடந்த 6 -ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தாம்பரத் தில் அரசு, தனியார் பள்ளி மாணவ, மாணவியருக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடும் பணியை சுவிட்சர்லாந்து உலக சுகாதார நிறுவன அலுவலர் மருத்துவர் கவுசிக் பானர்ஜி நேற்று ஆய்வு செய்தார். மேலும், தடுப்பூசி போடுவதற்காக பயன்படுத்தப்படும் மருந்துகளையும், அதைப் பதப்படுத்தும் முறைகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக செங்கை சுகா தார மாவட்ட துணை இயக்குநர் மருத்துவர் பழனி கூறியதாவது:
இந்தியாவில் தமிழகம், புதுச் சேரி, கர்நாடகம், கோவா, லட்சத் தீவுகளில் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதை சுவிட்சர்லாந்து உலக சுகாதார நிறுவன அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உலக சுகாதார நிறுவனத்துக்கும், இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இந்த ஆய்வறிக்கையை அவர் அனுப்பிவைக்க உள்ளார்.
செங்கல்பட்டு சுகாதார மாவட்டத்தில் 5 லட்சத்து 17 ஆயிரத்து 717 குழந்தைகளுக்கு, தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இதுவரை 25 சதவீதம் பேருக்கு தடுப் பூசி போடப்பட்டுள்ளது. பிப்ரவரி 28-ம் தேதிக்குள் இலக்கு நிர்ணயித்த அனைவருக்கும் தடுப்பூசி போடத் திட்டமிட்டுள்ளோம். இந்த தடுப் பூசியை போட்டுக் கொண்ட குழந்தைகள் பாதுகாப்பாக உள்ள னர். இவ்வாறு அவர் கூறினார்.