

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தோக்கவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ராஜா(40). இவரது மனைவி உஷா, மகன் சூர்யா. செங்கம் பேருந்து நிலையம் அருகே 2 தினங் களுக்கு முன்பு இந்த மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட் டது. அப்போது, அந்த வழியாகச் சென்ற செங்கம் போலீஸார் நம்மாழ் வார், முருகன், விஜயகுமார் ஆகியோர் ராஜா விடம் விசாரித் துள் ளனர்.
“எங்கள் குடும்பப் பிரச்சி னையில் நீங்கள் தலையிட வேண்டாம்” என்று ராஜா கூறி யுள்ளார். இதனால், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட து. திடீரென ராஜா, உஷா, சூர்யா ஆகியோரை போலீஸார் லத்தி யால் கண்மூடித்தனமாகத் தாக்கி, காலால் எட்டி உதைத்தனர்.
இந்தக் காட்சிகள் அடங் கிய வீடியோ வெளியானதால் போலீஸார் 3 பேரும் வேலூர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ராஜா குடும் பத்தினரை போலீஸார் தாக்கி யது தொடர்பாக திருவண்ணா மலை வருவாய் கோட்டாட்சியர் (ஆர்டிஓ) விசாரணைக்கு உத்த ரவிடப்பட்டு உள்ளது. அதன்படி, வருவாய் கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி நேற்று செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்கட்ட விசாரணையைத் தொடங்கினார்.
சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதியில் உள்ள கடைக்கா ரர்கள் சுமார் 15 பேரிடம் நேற்று விசாரணை மேற்கொண்டார். அவர்களிடம், நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்ததாகக் கூறப்ப டுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், தாக்குதல் நடத் திய போலீஸாரிடமும் விரைவில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
செங்கம் சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று நடந்தது. போலீஸ் தாக் குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத் தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தாக்குதல் நடத்திய போலீஸாரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
நீதிமன்றத்தில் ராஜா மனு
உயர் நீதிமன்றத்தில் ராஜா தாக்கல் செய்த மனுவில், “ஜூலை 11-ம் தேதி மதியம் 12.30 மணியள வில் செங்கம் மார்க்கெட் பகுதி யில் எனக்கும், எனது மனைவி உஷாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது செங்கம் சார்பு ஆய்வாளர் முருகன், போலீஸ்காரர்கள் நம்மாழ்வார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் எங்களிடம் ஏன் இங்கு நின்று தக ராறில் ஈடுபடுகிறீர்கள்? என்றனர். நான் குடும்பத் தகராறு என பதிலளித் தும், அவர்கள் என் கன்னத்தில் அறைந்தனர். எனது மகன் சூர்யா ஏன் அடிக்கிறீர்கள் என கேட்ட உடனே மகனையும் அடித்தனர். எனது மனைவி அவர்களை தடுத்த போது அவர்கள் 3 பேரும் சேர்ந்து எங்கள் மூவரையும் நடுரோட்டில் வைத்து அடித்து உதைத்தனர்.
இந்த சம்பவம் அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பானது. உடனே சம்பந்தப்பட்ட செங்கம் போலீஸ் ஆய்வாளர், என்னிடம் ரூ.1,000 கொடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு கூறினார். அதை வாங்க மறுத்ததால் அவரே 4 போலீஸாரை அனுப்பி சிகிச்சை பெற வைத்தார். உடனே டிஎஸ்பி ஷாஜி எங்களிடம் வந்து இதை பெரிதாக்க வேண்டாம். உங்களின் மகன் மற்றும் மகளின் கல்விக்கு உதவுகிறேன் என்றார்.
வலியால் 3 பேரும் இரவு முழுவதும் அலறினோம். எங்களை தாக்கிய சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட 3 போலீஸ்காரர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து அவர்களை உடனடியாக இடை நீக்கம் செய்ய வேண்டும். அத்துடன் எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நடந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் டி.ஆரோக்கியதாஸ் இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டுமென முறையிட்டார். அதையடுத்து விசாரணை இன்று தள்ளி வைக்கப்பட்டது.