Published : 18 Dec 2013 09:11 AM
Last Updated : 18 Dec 2013 09:11 AM

கார்த்தி சிதம்பரத்துக்கு பதவி அளிக்காததால் ராஜினாமா? - ஆதரவாளர்கள் அதிரடி முடிவு!

கார்த்தி சிதம்பரத்துக்கு மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் பதவி வழங்காததால் அவரது ஆதரவாளர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆண்டுக்கணக்கில் இழுபட்டுக் கொண்டிருந்த தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் வாசன் ஆதரவாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதேநேரம், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் 8 பேர் மாவட்டத் தலைவர்களாகவும் 10க்கும் மேற்பட்டவர்கள் மாநிலப் பொறுப்பா ளர்களாகவும் நியமிக்கப்பட்டனர். ஆனாலும், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு எந்தப் பதவியும் வழங்கப்பட்டவில்லை.

ஆதரவாளர்கள் ராஜினாமா?

“கார்த்தி பெயர் மாநிலத் துணைத் தலைவர் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டது. ஆனால், இறுதிப் பட்டியலில் அவரது பெயரை நீக்கிவிட்டனர்’ என்று அப்போதே சர்ச்சை வெடித்தது. இந்நிலையில், கார்த்தி மற்றும் சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் சிலர், கார்த்திக்கு கட்சிப் பதவி வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்யப் போவதாக கட்சித் தலைமைக்கு தகவல் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பொறுமையாக இருங்கள்: சிதம்பரம்

இதுகுறித்து அவர்களிடம் பேசியபோது, “கார்த்திக்காக நாங்கள் ராஜினாமா செய்யப்போவதாக வந்திருக்கும் செய்தி உண்மைதான். எப்படியும் அவருக்கு துணைத் தலைவர் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருந்தோம். பொருளாளர் பதவி கொடுக்கப்போவதாகக்கூட சொன்னார்கள். பதவி கிடைத்தால் தமிழ்நாட்டில் காங்கிரஸை பலப்படுத்த ஆக்கப்பூர்வமான திட்டங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டிருந்தார் கார்த்தி. ஆனால், யாரோ சூழ்ச்சி செய்து அவருக்கு பதவி கிடைக்கவிடாமல் செய்துவிட்டனர்.

சுதர்சன நாச்சியப்பனின் மகனுக்கு பொதுச் செயலாளர் பதவி கொடுத்திருக்கிறார்கள். அவரைவிட கார்த்தி எந்தவிதத்திலும் குறைந்தவர் அல்ல. அவருக்கே பதவி இல்லாதபோது நாங்கள் மட்டும் எதற்காக பதவியில் இருக்க வேண்டும். அதனால்தான் ராஜினாமா செய்யும் முடிவில் இருக்கிறோம். இது குறித்து தலைவர் சிதம்பரத்திடம் தெரிவித்தோம். ‘அப்படி ஏதும் செய்யக்கூடாது; பொறுமையாக இருங்கள்’ என்று கண்டிப்புடன் சொல்லி இருக்கிறார். டிசம்பர் 19-ல் சென்னையில் புதிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. அது முடிந்ததும் நாங்கள் எங்கள் முடிவை அறிவிப்போம்” என்றனர்.

ஏதோ சதி நடக்கிறது

இதனிடையே, “சிதம்பரம் அணியிலேயே கார்த்தியின் வளர்ச்சியைப் பிடிக்காத புல்லுருவிகள் சிலர் இருக்கிறார்கள். தாங்களும் கார்த்திக்காகப் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அவர்களும் வலிய வந்து செய்தி கொடுப்பதைப் பார்த்தால் இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது. கார்த்திக்காக தலைமையை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் ராஜினாமா செய்யப் போகிறார்கள் என்ற செய்தி டெல்லி வரைக்கும் போனால் கார்த்தி மீது தலைமைக்கு அதிருப்தி ஏற்படும். அதுமட்டுமில்லாமல், கட்சி இப்போது இருக்கும் நிலையில், ராஜினாமா கடிதம் கொடுத்தால் தயங்காமல் அதைப் பெற்றுக் கொண்டு அந்தப் பதவிகளில் வேறு நபர்களை நியமித்துவிடுவார் ராகுல். இதன் மூலம் கார்த்தியின் ஆட்கள் யாருமே காங்கிரஸ் கட்சியில் பதவியில் இல்லாத நிலையை உருவாக்கிவிடலாம் என்பதுதான் சதிகாரர்களின் திட்டம்” என்றும் சிலர் சொல்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x