

பாஜகவுடன் திமுக கூட்டணி வைப்பது சாத்தியமில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகனை சந்தித்து, நிர்வாகிகள் நியமனத்துக்கு நன்றி தெரிவித்தார்.
பின்னர் நிருபர்களுக்கு அவர் பேசும்போது, "கோஷ்டிப் பூசலுக்கு அப்பாற்பட்டு நிர்வாகிகள் நியமனம் நடந்துள்ளது. இதற்காக தமிழக காங்கிரஸ் தலைவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஒரு சிலரது பெயர்கள் நிர்வாகிகள் பட்டியலில் இடம் பெறவில்லை. விரைவில் வரவுள்ள அடுத்தப் பட்டியலில் அவர்களது பெயரும் இடம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
நான்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகளால் காங்கிரசுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. காங்கிரசுக்கான வாக்கு வங்கி குறையவில்லை.
டெல்லியில் ஆட்சி அமைத்தால் தங்கள் சாயம் வெளுத்துவிடும் என்று பா.ஜ.க. தலைவர்கள் பயப்படுகின்றனர். அதனால்தான் ஆட்சியமைக்க தயங்குகின்றனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்தான் வெற்றி பெறும். அந்தத் தேர்தலில் மோடி காணாமல் போய் விடுவார்.
நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தாலும், அந்த அணி பலமாக இருக்கும். மத சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். திமுகவைப் பொறுத்தவரை பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது சிரமம்.
காங்கிரஸ் தலைவர்கள் விஜயகாந்துடனும், திருமாவளவனுடனும் பேசுகிறோம். ஆனால் அது தேர்தல் கூட்டணிக்கான பேச்சு அல்ல" என்றார் இளங்கோவன்.