Published : 06 Mar 2017 10:28 AM
Last Updated : 06 Mar 2017 10:28 AM

கோவையின் நீராதாரத்தை மீட்க பாஜகவின் ‘தாமரையின் தாகம் தீர்க்கும் யாத்திரை’: 10-ம் தேதி தொடங்குவதாக வானதி சீனிவாசன் தகவல்

கோவையின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யக் கோரி பாஜக சார்பில் தாமரையின் தாகம் தீர்க்கும் யாத்திரை தொடங்கப்பட உள்ளதாக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நீர் மேலாண்மை குறித்த விவசாயிகள் கருத்துக் கேட்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதிசீனிவாசன் தலைமை வகித்தார்.

ஏராளமான விவசாயிகளும், பொதுப்பணித்துறை, மின்சார வாரிய முன்னாள் அலுவலர்களும் பங்கேற்றனர். அதில் கோவையின் நீராதாரங்களை மேம்படுத்துவது, அணை உள்ளிட்ட நீர் நிலைகளைத் தூர்வாருவது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து வானதி சீனிவாசன் கூறியதாவது: கோவையின் குடிநீர் ஆதாரங்களாக உள்ள சிறுவாணி, ஆழியாறு, பில்லூர் அணைகளைத் தூர்வார வேண்டும், நீராதாரங்களை தூர்வாரி, கரைகளை உயர்த்தி மீட்டெடுக்க வேண்டும், கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டும். குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வரும் 10-ம் தேதியில் இருந்து 14-ம் தேதி வரை இந்த யாத்திரை நடக்கிறது. அதற்கு முன்பாக 10 லட்சம் மக்களிடம் கோரிக்கைகளை முன்வைத்து கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம்.

யாத்திரையில் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ளூர் நீராதாரத்தை மீட்க விழிப்புணர்வு ஏற்படுத்தி, இளைஞர்கள் மூலம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க உள்ளோம். அதில் 50 வருடங்களாக திராவிடக் கழகங்களின் ஆட்சியில் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்காததை விளக்குவோம். இந்த யாத்திரையில், தமிழிசை சவுந்திரராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x