

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இணைப் பள்ளிகள் திட்டத்தின் கீழ், நாகை நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கிராமப்புறமான ஒரத்தூருக்குச் சென்று, அங்கு உள்ள சிதம்பரனார் நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து பழகி கல்வி பயின்றனர்.
ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் அன்பு அழைப்பின்பேரில், நாகை காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 40 பேர் நேற்று முன்தினம் ஒரத்தூருக்குச் சென்றனர்.
காலை முதல் மதியம் வரை வகுப்பறையில் ஒன்றாக அமர்ந்து பாடம் படித்த அவர்கள், மதியத்துக்குப் பின் வாழ்க்கைப் பாடம் கற்கும்விதமாக ஊரைச் சுற்றிப் பார்க்கச் சென்றனர்.
வயல்களுக்குச் சென்று விவசாயத்தின் முக்கியத்து வத்தையும், விவசாய முறைகளையும் முதலில் அறிந்து கொண்டனர். பின்னர், செங்கல் சூளைகளுக்குச் சென்று, அங்கு செங்கல் உருவாக்கப்படும் விதத்தை நேரில் கண்டறிந்தனர். அவர் களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு கிராமப்புற மாணவ, மாணவிகள் விளக்கம் அளித்தனர்.
இதையடுத்து, கிராமப்புற மாணவர்கள் பச்சைக் குதிரை, கில்லி தாண்டு, நாடு பிடித்தல் ஆகிய நாட்டுப்புற விளையாட்டுகளை சொல்லிக்கொடுத்து நகர்ப்புற மாணவர்களுடன் இணைந்து விளையாடினர். மாணவிகள் சில்லு, பாண்டி விளையாடுதல், கோலமிடுதல் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டனர்.
கிராமப்புற மாணவர்கள், தங்களின் வீடுகளில் செய்த பொரி உருண்டை, முளை கட்டிய பயறு வகைகள், வேக வைத்த சுண்டல் ஆகியவற்றைத் தங்களின் நகர்ப்புற நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.
பாக்கெட்களில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளின் தீமைகள், கிராமப்புறங்களில் வீடுகளில் தயாரிக்கப்படும் உணவுகளின் சிறப்புகள் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்கினர். தொடர்ந்து, மாலை வரை கிராமப்புற மாணவர்களுடன் இணைந்து பழகிய நகர்ப்புற மாணவர்கள் இனிய நினைவுகளைச் சுமந்துகொண்டு விடைபெற்றுத் திரும்பினர்.
இதற்கான ஏற்பாடுகளை, காடம்பாடி பள்ளித் தலைமை ஆசிரியர் இளமாறன், ஆசிரியை ஜூலியட், ஒரத்தூர் பள்ளித் தலைமை ஆசிரியர் சிவா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.