

பயிர்க் கடன் விவகாரத்தில் மத்திய நிதியமைச்சரின் இலவச ஆலோசனை விவசாயிகளுக்கு எதிரானதாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன் குறித்து, மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி, விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்வது சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் எடுக்க வேண்டிய முடிவு. அதற்கான தொகையை தங்களது கருவூலத்தில் இருந்தே மாநில அரசுகள் வழங்க வேண்டும். இதில் மத்திய அரசு எந்தவிதமான நிதியுதவியும் வழங்க இயலாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைச்சரின் கருத்து உள்ளது. இலவச ஆலோசனையை மிகத் தாரளமாக நிதி அமைச்சர் வழங்கியுள்ளார். அவரது ஆலோசனை பொறுப்பற்றது. இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மத்திய அரசுக்கும் உண்டு என்பதனை நிதி அமைச்சர் நிராகரிப்பது ஏற்புடையது அல்ல.
விவசாயிகள் வேண்டுமென்றே கடன் நிவாரணம் கோரவில்லை. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் சிறிதளவும் இல்லை. தாங்கள் மேற்கொண்ட விவசாயம் தண்ணீர் இன்றி, பருவ மழை பொய்த்துப் போனதால் பயிர்கள் கருகி அழிந்து விட்ட நிலையில், தாங்கள் பெற்ற பயிர்க் கடனை திருப்பிச் செலுத்திட இயலாமல் கடன் தள்ளுபடி செய்திட வேண்டும் என அரசை கோருவது தவறா?
பெருமுதலாளிகளுக்கு வழங்கப்பட்ட கடன் கோடிக் கணக்கில் வாராக்கடனாக உள்ளது. அதுமட்டுமல்ல ஆண்டு தோறும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தொழில் முதலாளிகளின் கண்ணில் வெண்ணெயும், விவசாயிகளின் கண்ணில் சுண்ணாம்பும் என்ற நிலையை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொள்கிறது.
விவசாயிகளின் மீது அரசுக்கு உண்மையில் அக்கறை இருக்குமேயானால் மாநில அரசுக்கு உட்பட்ட கூட்டுறவு அமைப்புகளின் மூலம் பெற்றுள்ள கடன்களை மாநில அரசும், வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க் கடனை மத்திய அரசும் வேறுபாடுகள் இன்றி தள்ளுபடி செய்திட வேண்டும். நம்பிக்கை இழந்துள்ள விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக புதிய பயிர்க் கடன் வழங்கி, விவசாய உற்பத்தி பெருக அரசுகள் ஆவன செய்வது தங்களின் கடமையாகும்'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.