

திருநெல்வேலி மாவட்டத்தில் நிலவும் வறட்சியும், தண்ணீர் பற்றாக்குறையும் சேர்ந்து, நீராதாரங்களை புனரமைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளன. இதன் வெளிப்பாடாகவே, மாவட் டத்தில் பல்வேறு இடங்களில் அரசை எதிர்பார்க்காமல் தாங்களா கவே குளங்களை மராமத்து செய் யும் பணியில் தன்னார்வலர்கள், பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.
குடிமராமத்து திட்டம்
தமிழகத்தில் அந்தந்த பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் நீராதா ரங்களை மீட்டெடுக்கும் வகையி லான குடிமராமத்து திட்டத்தை, அரசு ரூ.100 கோடியில் செயல் படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.6 கோடி செல வில் 101 குளங்களை மராமத்து செய்யும் பணிகள் தொடங்கி யுள்ளன.குளங்களை மீட்டெடுக் கும் பணியில் அரசு இறங்கி யிருப்பது விவசாயிகள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் அரசை மட்டுமே எதிர்பார்க்காமல் தங்கள் பகுதி குளங்களை, கோயில் தெப்பக் குளங்களை மராமத்து செய்து, எதிர்வரும் மழைக் காலத்தில் தண்ணீரை தேக்கி வைக்க வேண் டும் என்ற ஆர்வம் இளைஞர்கள் மத்தியில் உருவாகியிருக்கிறது.
வீரவநல்லூர்
வீரவநல்லூரில் உள்ள 600 ஆண்டுகள் பழமையான சுந்தரராஜ பெருமாள் கோயில் தெப்பக்குளத்தை மராமத்து செய்யும் பணியில், 60-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து, அருகிலுள்ள பூமிநாத சுவாமி கோயில் மரகத குளத்தையும் தூர்வாரி செப்பனிட தன்னார்வலர்கள் அடங்கிய குழு திட்டமிட்டுள்ளது.
மேலப்பாளையம்
இதுபோல், திருநெல்வேலி அருகே மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில், அப்பகுதி மக்கள் ஒத்துழைப்புடன், கன்னிமார் குளத்தில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் குளத்தில் கிடந்த குப்பைகளும், கழிவுகளும் அகற்றப்பட்டன.
அம்பாசமுத்திரம்
அம்பாசமுத்திரத்தில் அரசு ஒத்துழைப்புடன் 10 குளங்களை மராமத்து செய்யும் பணியில், சென்னையைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு களமிறங்கியுள்ளது. இப்பணியில் அந்தந்த பகுதி மக்களும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.
இதுபற்றி பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, “மழை நீரை சேமிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. அதனால்தான், நீராதார மராமத்து பணிகளுக்கு மக்கள் தாங்களாகவே ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இதன் மூலம், வரும் மழைக் காலத்தில் முன்னர் இருந்ததைவிட அதிகளவில் குளங்களில் தண்ணீர் சேகரமாகும்” என்று தெரிவித்தனர்.