Published : 09 Jul 2016 01:53 PM
Last Updated : 09 Jul 2016 01:53 PM

தேமுதிக, தமாகாவுடன் நட்புறவு நீடிக்கிறது: வைகோ பேட்டி

‘தேமுதிக, தமாகாவுடன் மக்கள் நல கூட்டியக்கம் கொண்டுள்ள நட்புறவு நீடிக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுப்பது அவர்களின் உரிமை’ என வைகோ தெரிவித்தார்.

ஈரோடு மாவட்ட மதிமுக நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி விட்டது. சட்டப்பேரவை தேர்தலில் ஜனநாயகத்துக்கும், பணநாயகத்துக்கும் மோதல் என்று நான் கூறவில்லை. ஊழலில் லட்சக்கணக்கான கோடிகளை சம்பாதித்த ஊழல் கட்சிகளின் பணநாயகத்துக்கு இடையேதான் போட்டி ஏற்பட்டது. இதில் ஜனநாயகம் காவு கொடுக்கப்பட்டு விட்டது. பணம்தான் எதையும் தீர்மானிக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிவைப் பற்றி கவலைப்படாமல் தமிழகத்தின் வாழ்வாதாரத்தை காப்பதற்காக மதிமுக தொடர்ந்து பாடுபடும். தமிழகத்திற்கு ஆபத்து தரும் திட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம்.

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நல கூட்டியக்கம் என்ற நிரந்தர அமைப்பில் உள்ள நான்கு கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடுவோம். தேமுதிக, தமாகாவுடன் கொண்டுள்ள நட்புறவு நீடிக்கிறது. உள்ளாட்சித்தேர்தலில் அவர்கள் எத்தகைய முடிவு எடுப்பார்கள் என்பது காலப்போக்கில் தெரியவரும். அது அவர்களின் உரிமை. நாட்டில் எந்த உயர்நீதிமன்றமும் எடுக்காத அநீதியான நடவடிக் கையை சென்னை உயர்நீதிமன் றம் எடுத்துள்ளது. வழக்கறிஞர் களின் உரிமையை பறிக்கும் சட்ட திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. வழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை குறித்து நீதிபதிகள்தான் கவலைப் பட வேண்டும். வழக்கறிஞர்களின் அமைதி வழியிலான போராட்டத்தை வரவேற்கிறோம்.

உலகம் முழுவதும் ஐஎஸ் தீவிரவாதிகளின் ஊடுருவல் பெரும் அச்சுருத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது மிகவும் கவலை தருகிறது. உளவுத்துறை அமைப்புகள் நவீன சாதனங்களை பயன்படுத்தி, அவர்களை கண்டுபிடிக்க வேண்டும். தமிழகத்தில் நடக்கும் கோரப்படுகொலைகளை பார்க்கும்போது, சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

இத்தகைய வெறி உணர்ச்சி வருவதற்கு சினிமா, சின்னத் திரைகளில் வன்முறைக் காட்சிகளை அதிகமாக காட்டுவதும் ஒரு காரணம். இது தொடர்பாக பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவைமட்டுமல்லாது இத்தகைய சம்பவங்களுக்கு மதுவே பிரதான காரணமாக உள்ளது.

தமிழகத்தில் முழு மதுவிலக்கு என்பதுதான் தற்போது தேவை. இல்லாவிட்டால் தமிழகம் நரகமாகி விடும்.

மத்திய அரசு கொடுக்கும் துணிச்சல் காரணமாகவே தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்துகிறது. நம் கடல் எல்லைக்குள் வந்து அவர்கள் தாக்குதல் நடத்தும்போது கூட, இந்திய கடற்படை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. மீனவர்களின் துன்பத்தை அரசு உண்மையிலேயே உணரவேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதிமுக அவைத்தலைவர் துரைசாமி, மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x