

பாதை ஆக்கிரமிப்பு வழக்கில், நடிகர் சங்கக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளுக்கு விதிக் கப்பட்ட தடையை மேலும் 2 வாரம் நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தி.நகரில் அபிபுல்லா சாலை, பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி அகலமுள்ள சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதாக தி.நகர் வித்யோதயா காலனியை சேர்ந்த ஸ்ரீரங்கன், அண்ணாமலை ஆகியோர் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, நடிகர் சங்கம் அங்கு கட்டிடம் கட்ட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
உயர் நீதிமன்றத்தால் நியமிக் கப்பட்ட வழக்கறிஞர் ஆணையர் இளங்கோவன் அங்கு ஆய்வு செய்து, நடிகர் சங்கம் எந்த ஆக்கிரமிப்பிலும் ஈடுபடவில்லை என அறிக்கை தாக்கல் செய்தார். முன்பு அந்த இடத்தில் தபால் நிலையம் இருந்ததாக மனுதாரர் கள் வாதிட்டனர்.
இதையடுத்து, அந்த இடத்தில் தபால் நிலையம் இருந்ததா? ஏற்கெனவே பாதை இருந்ததா? என்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி நிர்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாநகராட்சி தரப்பில் அவ காசம் கோரப்பட்டது. மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்யும் வரை, கட்டுமானப் பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி நடிகர் சங்கம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் 2 வாரங்களுக்கு தள்ளிவைத்து, அதுவரை தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.