

தமிழக அமைச்சரவையில் இருந்து கே.வி.ராமலிங்கம் திங்கள்கிழமை நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ஆர்.பி.உதயகுமார் மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஒன்றரை மாதங்களில் மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வான ஆர்.பி.உதயகுமார் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
3 பேருக்கு இலாகா மாற்றம்
மேலும், அமைச்சர் பி.வி.ரமணா வகித்து வரும் வணிகவரி, பத்திரப்பதிவு மற்றும் முத்திரைத் தீர்வை துறையின் பொறுப்பு, அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் வகித்து வரும் வருவாய், துணை ஆட்சியர்கள், கம்பெனிகள் பதிவு, கடன் நிவாரணம், எடை மற்றும் அளவை ஆகிய துறைகள், அமைச்சர் பி.வி.ரமணாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எம்.சி. சம்பத் வகித்து வந்த சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டுத்துறை பொறுப்பை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கவனிப்பார்.
அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமாருக்கு, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா பரிந்துரையின் பேரில், ஆளுநர் ரோசய்யா இதற்கான ஒப்புதலை அளித்துள்ளார். இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகையில் புதன்கிழமை காலை 9.45 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் புதிய அமைச்சராக ஆர்.பி.உதயகுமார் பொறுப்பேற்கிறார். மீண்டும் வாய்ப்பு ஏற்கனவே, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்த ஆர்.பி.உதயகுமார், கடந்த ஆண்டு ஜூலை 18-ம் தேதி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவ்வப்போது புகார்களில் சிக்கும் அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு வருகிறது. கட்சிப் பதவியில் இருந்தும் நீக்கப்படுகின்றனர். சிலரது இலாகாக்கள் மாற்றப்படுகிறது. பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கே.வி.ராமலிங்கம், மணல் விவகாரத்தால் இலாகா மாற்றப்பட்டு, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக ஆக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் மீது நில அபகரிப்பு புகார் எழுந்தது. இதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு ராமலிங்கத்திடம் இருந்த ஈரோடு மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இப்போது, அமைச்சரவையில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் அதிமுக அரசு பொறுப்பேற்றது.
அதன்பிறகு இதுவரை 13 முறை அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் மூன்று முறை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 30-ம் தேதி, சுகாதாரத்துறை அமைச்சராக டாக்டர் சி.விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டார். அத்துறையின் பொறுப்பை வகித்து வந்த கே.சி.வீரமணி, பள்ளிக் கல்வித்துறைக்கு மாற்றப்பட்டார்.
அடுத்ததாக நவம்பர் 11-ம் தேதி மூன்று அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டன. பொதுப்பணித்துறையில் இருந்து விளையாட்டுத் துறைக்கு கே.வி.ராமலிங்கம் மாற்றப்பட்டார். அத்துறை, நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பதவியேற்பு விழா:
புதிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பதவி ஏற்பு விழா நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 9.45 மணிக்கு ஆளுனர் மாளிகையில் நடைபெறுகிறது.