Published : 19 Oct 2014 11:12 AM
Last Updated : 19 Oct 2014 11:12 AM

போலி ‘பழங்கால’ நாணயங்களை பல ஆயிரத்துக்கு விற்கும் கும்பல்: நடவடிக்கை எடுக்க சேலம் நாணயவியல் சங்க இயக்குநர் வலியுறுத்தல்

ஆங்கிலேயர் காலத்து பழங்கால நாணயத்தை போலியாக தயாரித்து, ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் பாராமாஹால் நாணயவியல் சங்க இயக்குநர் சுல்தான் தெரிவித்துள்ளார்.

பழங்கால நாணயங்களை பள்ளிக் குழந்தைகள் முதல் நாணயவியல் சேகரிப்பாளர்கள் வரையிலானவர்கள் பொக்கிஷமாக சேகரித்து வருகின்றனர். கி.மு., கி.பி. நாணயங்களும், சேர, சோழ, பாண்டிய கால நாணயங்கள், திப்புசுல்தான், விஜயநகர பேரரசு, ஆங்கிலேயர், முகலாய பேரரசு காலத்து நாணயங்களை நாணயவியலார்கள் மற்றும் நாணய சேகரிப்பாளர்கள் சேகரிக்கின்றனர். அவ்வப்போது, நாணயவியல் கண்காட்சியை நடத்தி, நமது நாட்டின் பழங்கால வரலாறு, கலாசாரம், பண்பாடு உள்ளிட்டவற்றை இளையதலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் அரும்பணியாற்றி வருகின்றனர்.

பழங்கால நாணயங்களுக்கு தனி மவுசு உண்டு. தங்கம், வெள்ளி, செம்பு, செப்பு, தோல் என பலதரப்பட்ட பழங்கால நாணயங்களைப் பாதுகாத்து வருகின்றனர். இந்த நாணயங்களை சேகரிப்பவர்கள் பல ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி பாதுகாத்து வருகின்றனர். நாணய சேகரிப்பாளர்களை குறி வைத்து, ஒரு கும்பல் போலியாக பழங்கால நாணயங்களைத் தயாரித்து விற்பனை செய்வது அம்பலமாகியுள்ளது. பழங்கால நாணயங்களை மாதிரியாகக் கொண்டு, அதே மாதிரியானவற்றை தயாரித்து, 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர்.

கள்ளநோட்டுகளை புழக்கத் தில் விடுவதைப் போன்று, தற்போது பழங்கால நாணயங்களிலும் கள்ள நாணயங்களை வெளியிட்டு பெரும் வரலாற்று பிழையை கும்பல் அரங்கேற்றி வருகிறது. இதுகுறித்து சேலம் பாராமாஹால் நாணயவியல் சங்க இயக்குநர் ஜி.சுல்தான் கூறியதாவது: மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் பழங்கால நாணயங்களை சேகரிப்பவர்களும், ஆராய்ச்சியாளர்களும், வல்லுநர்களும் பழங்கால நாணயங்களுக்கு விலைப் பட்டியல் வெளியிட்டுள்ளனர்.

இந்த விலை பட்டியலில் அரிதான நாணயங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் முதல் பல லட்சம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலைப் பட்டியலில் உள்ள அரிய நாணயங்களை, போலியாக தயாரித்து, நாணயவியல் சேகரிப்பாளர்களை ஏமாற்றி விற்பனை செய்கின்றனர்.

ஆங்கிலேயர் காலத்தில் கி.பி. 1874-ம் ஆண்டு அச்சிடப்பட்ட பிரிட்டிஷ் மஹாராணி விக்டோரியாவின் தலை அச்சிடப்பட்ட நாணயத்துக்கு ரூ.25 ஆயிரம் விலைப் பட்டியல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாணயத்தை போலியாக தயாரித்து நாணயவியல் சேகரிப்பாளர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையிலான விலையில் விற்றுள்ளனர். பழங்கால நாணயத்துடன் போலி நாணயத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது சுற்றளவு, செம்பு கலப்பு, பூ வேலைப்பாடு மற்றும் அதன் திடம் மாறுபடுகிறது.

ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், அது போலி நாணயம் என சோதனை மூலம் கண்டுபிடிக்க முடியும். நாணயங்கள் பற்றி அறியாதவர்களால், எளிதில் போலி நாணயத்தைக் கண்டறிய முடியாமல், பல ஆயிரம் ரூபாய் விலை கொடுத்து பழங்கால நாணயம் என நம்பி வாங்கிவிடுகின்றனர். இதனால், நாணயவியலாளர்கள் பெரும் நஷ்டம் அடைவதை காட்டிலும், பழங்கால வரலாறு மறைக்கப்படவும், நம்பகத்தன்மையை இழக்கும் நிலை ஏற்படும்.

எனவே, பழங்கால நாணயங்களில் போலியாக தயாரித்து விற்பனை செய்பவர்கள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x