

ஐஆர்சிடிசி சார்பில் சென்னை சென்ட்ரல், தாம்பரம், நெல்லை ரயில் நிலையங்களில் “புட் பிளாஸா” விரைவில் திறக்கப்படும் என்று ஐ.ஆர்.சி.டி.சி. மண்டல இயக்குநர் ஸ்ரீராம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சென்னையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
ஐஆர்சிடிசி சார்பில் முக்கிய மான ரயில் நிலையங்களில் புட் பிளாஸா திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஓட்டல் நடத்துவதில் அனுபவமிக்க முக்கிய நிறுவனங்கள் புட் பிளாஸா நடத்துகின்றன. அதுபோல சென்னை சென்ட்ரல், தாம்பரம், நெல்லை ஆகிய ரயில் நிலையங்களில் புதிதாக புட் பிளாஸா விரைவில் திறக்கப்படவுள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவில் ஆன்-லைன் புக்கிங் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆன்-லைனில் முன்பதிவு செய்கின்றனர். முன்பு, ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஒரு நிமிடத்தில் 2 ஆயிரம் பேர் டிக்கெட் எடுத்தனர்.
இந்த இணையதளத்தின் சர்வர் ரூ.150 கோடி செலவில் மேம்படுத் தப்பட்டது. அதையடுத்து வேகம் அதிகரிக்கப்பட்டு, இப்போது ஒரு நிமிடத்துக்கு 7200 பேர் டிக்கெட் எடுக்கின்றனர்.
ஒரே நேரத்தில் நாடு முழுவதும் 1.20 லட்சம் பேர் டிக்கெட் எடுக்க முடியும். ஒரு வினாடியில் 120 பரிவர்த்தனை (டிரான்ஸாக்ஷன்) நடக்கிறது. கடந்த மார்ச் 19-ம் தேதி ஒரேநாளில் அதிகபட்சமாக 5.8 லட்சம் பேர் டிக்கெட் எடுத்தனர். வேகம் அதிகரிக்கப்பட்ட பிறகு ஆகஸ்டு 27-ம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 7.15 லட்சம் பேர் டிக்கெட் எடுத்துள்ளனர் என்றார் ஸ்ரீராம்.