Published : 04 Mar 2017 02:48 PM
Last Updated : 04 Mar 2017 02:48 PM

உணவுப்பொருட்கள் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: விஜயகாந்த்

மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகமாகாமல் தமிழக அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இயற்கையின் அனைத்து வளங்களும் இருக்கக்கூடிய நம்நாடு, உணவுப்பொருட்கள், பிற அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. விலைவாசி உயர்வினால் பாதிக்கப்படுவோர் ஏழை மக்களே. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த சரியான திட்டங்களை அரசு நடைமுறைபடுத்தும் நிர்வாக அமைப்பு உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே போகிறது. பெட்ரோல் விலை மற்றும் பெட்ரோலிய பொருட்களின் விலை அடிக்கடி அதிகரிப்பதால் மற்ற பொருட்களின் விலை உயர்வடைகிறது.

நாட்டில் விளை நிலங்களின் பரப்பளவு குறைந்து கொண்டே போகிறது. மக்கள் தொகையும் கூடிக்கொண்டே போகிறது. தரிசு நிலங்களை, விளைநிலங்களாக்கும் திட்டங்கள் தீட்டி நடைமுறைபடுத்துவதும் இல்லை. நாட்டில் விளையும் உணவுப் பொருட்கள்,இன்றைய மக்கள் தொகைக்கு போதுமானதாக இல்லை. பற்றாக்குறைக்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் கூடுதல் செலவும், அதனால் விலையும் அதிகமாகிறது.

மக்களின் தேவைக்கு வேண்டிய உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்ய ஆக்கபூர்வமான திட்டங்கள் தீட்டி செயல்படுத்தாத நிலையில் அரசு உள்ளது. மாநகராட்சி, நகராட்சி அருகில் உள்ள கிராமங்களில்,விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளதால், காய்கறிகளின் விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகமாகாமல் தமிழக அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x