

வி.கே.சசிகலா கட்சி, ஆட்சி அதிகாரத்துக்கு வருவதை நான் எதிர்க்கிறேன் என தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் பி.ஹெச். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த பி.ஹெச்.பாண்டியன், "தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெறும் நிகழ்வுகள் எனது மவுனத்தை கலைக்க வைத்திருக்கின்றன. வி.கே.சசிகலா கட்சி, ஆட்சி அதிகாரத்துக்கு வருவதை நான் எதிர்க்கிறேன்.
அதிமுக பொதுச் செயலாளரை கட்சியின் தொண்டர்களே தேர்வு செய்ய வேண்டுமே தவிர பொதுக்குழு அல்ல. சசிகலா, தற்போது தற்காலிக பொதுச் செயலாளராகத் தான் இருக்கிறார்.
கடந்த செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு முன்னதாக போயஸ் கார்டனில் நடந்தது என்னவென்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாள் முதல் நான் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று வந்தேன். டிசம்பர் 5-ம் தேதி மாலையில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. அன்றைய இரவு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அப்போது முதல்வர் அறையில் இருந்து வந்த அணிவகுத்து வந்த சசிகலா உள்ளிட்டோர் கண்ணீர் சிந்தவில்லை. யாருடைய முகத்திலும் கவலையில்லை. யாரும் கதறவில்லை. ஜெயலலிதா யாரையெல்லாம் ஒதுக்கிவைத்தாரோ அவர்கள்தான் சசிகலாவுடன் இருந்தனர்.
அந்த நேரத்தில், அங்கிருந்த காவல்துறை உயரதிகாரியிடம் இப்போதாவது முதல்வரைப் பார்க்க வேண்டும் எனக் கோரினேன். ஆனால், மறுத்துவிட்டனர். அவரது உடல் எம்பாமிங் செய்யப்படவிருக்கிறது. அதற்கு 4 மணி நேரமாகும் எனக் கூறி எங்களை அப்புறப்படுத்தினர். இறுதி அஞ்சலியின்போதும் ஜெயலலிதாவின் உடலைச் சுற்றி சசிகலாவும் அவரது உறவினர்களும் மட்டுமே இருந்தனர்.
ஜெயலலிதா மறைந்து 25 நாட்களிலேயே அவசர அவசரமாக பொதுச் செயலாளர் பதவியை அடைந்தார் சசிகலா. அதிமுக தொண்டர்களை வஞ்சித்து அவர்களது உரிமைகளை பறித்து பொதுச் செயலாளர் பதவியை அவர் அடைந்திருக்கிறார்.
சசிகலாவையும் அவரது உறவினர்களையும் அரசியலில் ஈடுபட அனுமதிக்கமாட்டேன் என ஜெயலலிதா என்னிடம் தெரிவித்தார். மேலும், தன்னை விஷம் வைத்து கொன்றுவிடுவார்களோ என அஞ்சுவதாக ஜெயலலிதா என்னிடம் தெரிவித்தார். எனவே, வி.கே.சசிகலா கட்சி, ஆட்சி அதிகாரத்துக்கு வருவதை நான் எதிர்க்கிறேன்" என்றார்.
</p><p xmlns=""><iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/6z0ApVBMbO8" frameborder="0" allowfullscreen="" /></p>