

கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை முதல் மாமல்லபுரம் வரையில் ரூ.272 கோடி செலவில் 4 வழிப் பாதை அமைக்கும் பணிகளை 2016-ல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரில் இருந்து தொடங்கும் கிழக்கு கடற்கரை சாலை (ஈசிஆர்) மாமல்லபுரம், புதுச்சேரி வழியாக தூத்துக்குடி வரை செல்கிறது. இந்தச் சாலையில் திருவான்மியூர் முதல் மாமல்லபுரம் வரை ஏராளமான வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு மையங்கள், சுற்றுலாத் தலங்கள் உள்ளன. மேலும், ஈசிஆருக்கு இணையாக செல்லும் பழைய மாமல்லபுரம் சாலையிலும் (ஓஎம்ஆர்) ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் பல மடங்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதனால், ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஈசிஆரில் குறுகிய சாலையாக இருப்பதாலும், சென்டர் மீடியன் மற்றும் போதிய விளக்கு வசதி இல்லாததாலும் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே, ஈசிஆர் சாலையை விரிவுபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவந்தனர்.
இதை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரையில் இருந்து மாமல்லபுரம் வரை ரூ.272 கோடி செலவில் 4 வழிப்பாதையாக மாற்ற முடிவு செய்து அறிவித்தது. இதற்காக முட்டுக்காடு, கோவளம், நெம்மேலி, கிருஷ்ணன்காரணை, பட்டிபுலம், சாலவன்குப்பம், தேவன்சேரி உள்ளிட்ட கிராமங்களில் மொத்தம் 59 ஹெக்டர் நிலம் தேவைப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அக்கரை மற்றும் உத்தண்டி பகுதியில் மட்டுமே நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஎன்ஆர்டிசி) அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:
அக்கரையில் இருந்து மாமல்லபுரம் வரையிலான சாலையை 4 வழிப் பாதையாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 4 மாதங்களாக நடந்து வருகிறது. இதற்கான நிலம் பெரும்பாலும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
அக்கரை மற்றும் உத்தண்டி பகுதியில் மட்டுமே சிறிய அளவில் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இதுதவிர, மற்ற இடங்களில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. முட்டுக்காடு, மாமல்லபுரம் உள்ளிட்ட 13 இடங்களில் உள்ள சிறிய பாலங்களை அகலப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.17 இடங்களில் உள்ள வளைவுகளை நேராக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர நடைபாதைகள், மின்விளக்கு வசதிகள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும்.
ஒட்டுமொத்த பணிகளையும் 2016-ல் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இந்தப் பணிகள் முடிந்தால் விபத்துகள் குறையும். உயர்தரமான போக்குவரத்து வசதியை மக்கள் பெற முடியும். போக்குவரத்து நேரத்தையும் குறைக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.