

சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள்.
சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளது. ஆனால் இந்த இடத்துக்கு தேவையான முக்கியத்துவத்தை போக்குவரத்து காவல்துறை வழங்காமல் உள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையம், அரசு பொது மருத்துவமனை என்று மக்கள் அதிகமாக வந்துசெல்லும் இடங்களைக் கொண்ட இப்பகுதியில் ஓரிரு போக்குவரத்து காவலர்களை மட்டுமே பணியில் ஈடுபடுத்துகின்றனர். இது அவர்களின் பணிப்பளுவையும் மனச் சோர்வையும் அதிகப்படுத்து கிறது. இதன் விளைவாக அப் பகுதியில் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் பலரும் கடைசி நேரத்தில் படபடப்புடன் ரயில்களைப் பிடிக்க சென்ட்ரலை நோக்கி ஓடும் நிலை உள்ளது.
புதிதாக வாகனங்களை வாங்குபவர்கள், சென்ட்ரலுக்கு எதிர்புறம் உள்ள பாடிகாட் முனீஸ்வரர் ஆலயத்தில் பூஜை போட வருவதால் பல்லவன் சாலையைக் கடக்கவே 15 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. அடுத்ததாக மேம்பாலத்திலேயே 4 மண்டகப்படிகள். காந்தமலை ஜோதி, வடலூர் ஜோதிக்கு இணையாக சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் வர அனுமதிக்கும் சிக்னல் ஜோதியும் பச்சையில் சிலபல விநாடிகள் மட்டுமே ஒளிர்ந்து சட்டென்று சிவந்து விடுகிறது.
உலகிலேயே மிகப் பெரிய ரயில்நிலைய வாயிலில் ‘மேனுவலாக’ சிக்னல் மாற்றும் தொழில்நுட்பம் சென்னைக்கே உரியது. காவல்துறையின் மூத்த அதிகாரிகள் யாரும் பல்லவன் சாலை வழியாக சென்ட்ரலுக்கு வந்து பல ஆண்டுகளாகியிருக்கும் என்பதை இதன்மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த வாகன நெரிசலுக்கான தீர்வை மக்களே முன்வைக்கிறார்கள். “தினந் தோறும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பல்லவன் சாலையில், எம்.டி.சி. பேருந்து களை மட்டும் சென்ட்ரலை நோக்கி அனுமதிக்க வேண்டும். எதிர்திசையில் வழக்கம்போல வாகனங்களை அனுமதிக்கலாம். ஆட்டோ, கார், வேன், பைக்குகளை தீவுத்திடல் பக்கமாகத் திருப்பி விட வேண்டும். இதனால் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும். பெட்ரோல், டீசல் விரயமும், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் மட்டுப்படும். வட சென்னை, ஜார்ஜ் டவுன் செல்கிறவர்கள் சென்ட்ரல் எதிரில் வந்து நேரத்தை இழப்பதும் தவிர்க்கப்படும்” என்பது மக்கள் சொல்லும் தீர்வாக உள்ளது.
சென்னை சென்ட்ரல் எதிரில் 4 திசைகளிலும் 4 காவலர்களை நிறுத்தி நிறுத்து கோட்டைத் தாண்டி வாகனங்கள் வராமல் தடுப்பதன் மூலமும் போக்குவரத்தைத் தடையின்றி தொடரச் செய்யலாம். அடுத்த முறையாவது காவல்துறைக்கு ஆள் எடுக்கும்போது சென்ட்ரல் ரயில் நிலைய வாசலுக்கும் சேர்த்து ஆள் எடுக்கவேண்டும் என்பதே சுரங்கப் பாதையிலும், மேம்பாலத்திலும் அன்றாடம் ஓடி அலையும் ரயில் பஸ் பயணிகளின் வேண்டுகோளாக உள்ளது.