

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கையை ஏற்று, இந்திய வானொலியில் இந்தியில் விளம்பர நிகழ்ச்சிகளை 4 மணி நேரம் ஒலிபரப்புவதை நிறுத்தப்பட்டதாக, அக்கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜக வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ஜவடேகரை புது டெல்லியில் சந்தித்து, இந்திய வானொலியில் இந்தியில் விளம்பர நிகழ்ச்சிகளை 4 மணி நேரம் ஒலிபரப்புவதை நிறுத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டார். உடனே உடனே அமைச்சர், அதிகாரிகளை அழைத்து, அந்த இந்தி விளம்பர ஒலிபரப்புகளை நிறுத்தும்படி உத்தரவிட்டார்.
தமிழக மக்களின் உணர்வுகளை பாரதிய ஜனதா கட்சி மிகவும் மதிக்கிறது என்பதை அவர் தெரிவித்தார். உடனடியாக நடவடிக்கை எடுத்த மத்திய அமைச்சருக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி கூறிய தமிழிசை சவுந்தரராஜன், எந்த மொழியாக இருந்தாலும் அதை படிப்பதையும், ஏற்பதையும் மக்கள் தாமாகவே விரும்பி ஏற்றுக் கொள்ள பாரதிய ஜனதா கட்சி எண்ணுகிறது. மாறாக எந்த நிலையிலும் மொழியை திணிப்பதை பாரதிய ஜனதா கட்சி மேற்கொள்ளாது என்பதற்கு இன்றைய மத்திய அமைச்சரின் உடனடி நடவடிக்கையே ஒரு நல்ல உதாரணம் என்று தெரிவித்தார்.
இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.