

புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர், "புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்டவரையறை உருவாக்கப்பட்டு மத்திய உள்துறை, சட்டம், வனத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. அதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரீசிலித்து அனுமதி தந்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ கடிதம் வந்தவுடன் அடுத்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டை நடத்துவது தொடர்பான சட்டம் நிறைவேற்றப்படடும். பின்னர் புதுவையில் ஜல்லிக்கட்டை நடத்தலாம்.
கர்நாடக மாநில அரசு காவிரியில் புதுவைக்குரிய 9 டிஎம்சி நீரை தராமல் உள்ளது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பருவமழை பொய்க்கும் காலங்களில் கர்நாடகம், கேரளம், தமிழகம், புதுவை மாநிலங்கள் கிடைக்கும் நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக நிபுணர்கள் அடங்கிய காவிரி மேற்பார்வைக்கு குழுவுக்கு புதுவை மாநிலம் சார்பில் பிரதிநிதிகளை நியமிக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தகவல் அனுப்பி உள்ளது. விரைவில் பிரதிநிதிகளை அறிவிப்போம் தோராயமாக இக்குழுவில் மாநிலந்தோறும் தலா மூவர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கிறோம்.
ஆட்டோ டிரைவர்கள் நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கவில்லை என புகார்கள் வருகின்றன. இதுதொடர்பாக காவல்துறையினர், போக்குவரத்து துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.