Published : 25 Oct 2014 02:57 PM
Last Updated : 25 Oct 2014 02:57 PM

இலங்கைக்கு வெளிப்படையாகவே உதவுகிறது பாஜக: வைகோ குற்றச்சாட்டு

பாரதிய ஜனதா அரசு சிங்கள அரசுக்கு வெளிப்படையாகவே உதவுகிறது. அதனால்தான் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று பகிரங்கமாகச் சொல்ல முடிகிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவும், இலங்கைக்கு துணையாகவும் செயல்படும் மத்திய அரசின் போக்கு எதிர்காலத்தில் விபரீதமான விளைவுகளையே ஏற்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: "உலகின் பூர்வகுடி மக்களான தமிழர்களின் நெடிய வரலாற்றில் தமிழ் இனத்துக்கு தற்போது ஏற்பட்டுள்ள துன்பமும், கேடும் போல இதுவரையில் நேர்ந்ததில்லை. இந்தியாவில் புதிய அரசு பொறுப்பேற்று ராஜபக்சவை இந்தியாவுக்கு வரவழைத்தபோதே அதை தடுப்பதற்காக நான் எவ்வளவோ நரேந்திரமோடியிடம் மன்றாடிப் பார்த்தேன்.

அக்டோபர் 9 ஆம் தேதி அன்று இந்தியாவின் ராணுவ அமைச்சுத்துறை செயலாளர் ஆர்.கே.மாத்தூர் சிங்கள அதிபர் ராஜபக்சவை சந்தித்து இலங்கையிடம் இருந்துதான் நாங்கள் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்று கூறியுள்ளார்.

பச்சைக் குழந்தைகளையும், கர்ப்பிணிப்பெண்களையும் கொல்வதும், இளம் பெண்களைக் கற்பழித்துக் கொலை செய்வதும், உலகம் தடை செய்த குண்டுகளை வீசி பொதுமக்களை பலியிடுவதும், இவையெல்லாம் இந்திய இராணுவம் சிங்களவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களா?

இது மட்டுமல்ல, சிங்கள ராணுவ அதிகாரிகள் இந்தியாவுக்கு வந்து இங்குள்ள ராணுவத்தினருக்கு பாடம் வகுப்பு நடத்தப் போகிறார்களாம். பயிற்சி கொடுக்கப் போகிறார்களாம். அதற்கும் ஏற்பாடாகியிருக்கிறது.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்களுக்கு உதவியபோதும், ஒளிவு மறைவாக செய்தது. கடைசிக்கட்டத்தில் பயந்து பின்வாங்கியது. ஆனால், பாரதிய ஜனதா அரசு சிங்கள அரசுக்கு வெளிப்படையாகவே உதவுகிறது. அதனால்தான் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று பகிரங்கமாகச் சொல்ல முடிகிறது.

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையோ, பிரதமரோ இதுவரை கண்டித்தார்களா? இல்லை. அவரது தனிப்பட்ட கருத்து என்று சொல்லி பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது.

வெந்த புண்ணில் வேல் வீசுகிறது இந்திய அரசு. மான உணர்ச்சி தமிழ்நாட்டில் அழிந்துவிடவில்லை. அது அழியாது. அது ஆயிரங்காலத்துப் பயிர். கேள்வி கேட்பார் இல்லை. நாம் எதைச் செய்தாலும் யார் தடுக்க முடியும் என்ற மனோபாவத்தில் மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும், சிங்கள கொடியோருக்கு துணையாகவும் செயல்படும் போக்கு எதிர்காலத்தில் விபரீதமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை காலம் நிச்சயமாக நிரூபித்துக் காட்டும்" என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x