

1 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 சார்கருவூல அலுவலகக் கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''நிர்வாக வசதிக்காகவும்,அரசுக்கு ஏற்படும் தொடர் வாடகை செலவினத்தைத் தவிர்க்கவும், தற்போது மின் ஆளுமை திட்டங்களான தானியங்கி பட்டியல் ஏற்புமுறை மற்றும் மின் ஓய்வூதியம் போன்ற திட்டங்களை செம்மையாக செயல்படுத்திடவும், விலைமதிப்புமிக்க முத்திரைத் தாட்கள் மற்றும் சேமபாதுகாப்பு பொருட்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கவும், ஓய்வூதியதாரர்களுக்கான வசதிகள் செய்து கொடுக்கவும், மாற்றுத் திறனாளிகளுக்கான தனி சாய்தளம் அமைக்கவும், வாடகை கட்டிடங்களில் இயங்கும் சார்கருவூலங்களுக்கு சொந்தக் கட்டிடங்கள் கட்டப்படும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் 26 கோடியே 91 லட்சம் ரூபாய் செலவில் 45சார்கருவூல அலுவலகக் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 12 கோடி ரூபாய் செலவிலான 19 சார்கருவூல அலுவலகக் கட்டிடங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில், திருநெல்வேலிமாவட்டம் - வி.கே. புதூரில் 2500 சதுர அடி கட்டிட பரப்பளவில், பொதுமக்கள்/ ஓய்வூதியதாரர்களுக்கான காத்திருப்பு அறை, காப்பறை, பணியாளர்கள் அறை, கருவூல அலுவலர்கள் அறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்கருவூல அலுவலகக் கட்டிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
மேலும், பெரம்பலூர் மாவட்டம் - வேப்பந்தட்டையில் 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் அரியலூர் மாவட்டம் - செந்துறையில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், என மொத்தம், 1 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 சார்கருவூல அலுவலகக் கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.