Published : 10 Jan 2017 01:19 PM
Last Updated : 10 Jan 2017 01:19 PM

பொங்கல் திருநாள் மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் நீடிக்க வேண்டும்: மோடிக்கு வைகோ கடிதம்

பொங்கல் திருநாள் மத்திய அரசின் கட்டாய விடுமுறை நாள்களின் பட்டியலில் நீடித்திட ஆவன செய்திட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக வைகோ எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

''தமிழகத்தில் வாழுகின்ற தமிழர்களுக்கு மட்டும் அல்ல, உலகம் முழுமையும் வாழுகின்ற அனைத்துத் தமிழர்களுக்கும் கவலையை ஏற்படுத்தி இருக்கின்ற ஒரு பிரச்சினையைக் கனத்த இதயத்தோடு தங்களது உடனடிக் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொன்றுதொட்டுத் தமிழர்கள் கொண்டாடி வருகின்ற பண்பாட்டுத் திருவிழா தைப்பொங்கல் நன்னாள் ஆகும். இது உழவர்களின் திருநாள். இந்து, முஸ்லிம், கிறித்துவர் என அனைத்துத் தமிழர்களும் உணவு தானியங்களை விளைவித்துத் தருகின்ற இயற்கைக்கும், உதவியாக இருக்கின்ற கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கின்ற வகையில் இந்தத் திருநாளைக் கொண்டாடுகின்றனர்.

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 14 அல்லது 15 ஆம் தேதியில் தைப்பொங்கல் கொண்டாடப்படுகின்றது. இதுவரையிலும் மத்திய அரசின் கட்டாய விடுமுறைப் பட்டியலில் இடம் பெற்று இருக்கின்றது. அந்தப் பட்டியலில் இருந்து பொங்கலை நீக்கி, விருப்பம் உள்ள பகுதிகளில் விடுமுறை நாளாகக் கொண்டாடக் கூடிய பட்டியலில் சேர்த்து இருப்பதாக வெளியாகி இருக்கின்ற தகவல் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

கடந்த 2016 டிசம்பர் 15 ஆம் நாள் நான் தங்களைச் சந்தித்தபோது, பொங்கல் பண்டிகையின் ஒருபகுதியாக நடைபெறுகின்ற ஜல்லிக்கட்டு எனும் மாடுபிடி விளையாட்டு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகின்றது என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தேன்.

காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகளின் பட்டியலில் இருந்து காளை மாடுகளை நீக்கி, ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்து இருக்கின்ற தடையை அகற்றிட உதவிடுமாறு வேண்டுகோள் விடுத்தேன். எனது கோரிக்கை மனு மீது தாங்கள் குறிப்பு எழுதியதைக் கண்டு, ஜல்லிக்கட்டு மீதான தடை உறுதியாக நீக்கப்படும் என மகிழ்ச்சி அடைந்தேன்.

இந்தப் பிரச்சினையில், தமிழகத்தின் இளைஞர்களும் மாணவர்களும் விவசாயிகளும் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில், பொங்கல் திருநாளை மத்திய அரசின் கட்டாய விடுமுறைப் பட்டியலில் இருந்து அகற்றி இருப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்ற வேதனையாக இருக்கின்றது.

எனவே, இந்த முடிவை உடனே மறுபரிசீலனை செய்து, தற்போது உள்ள நிலை தொடர்ந்திடும் வகையில், பொங்கல் திருநாள் மத்திய அரசின் கட்டாய விடுமுறை நாள்களின் பட்டியலில் நீடித்திட ஆவன செய்திடுமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x