Published : 02 Jan 2016 05:42 PM
Last Updated : 02 Jan 2016 05:42 PM

மின்சார கொள்முதலில் தொடரும் முறைகேடு: ராமதாஸ் கண்டனம்

மின்வாரியத்தின் நிதிநிலையை மோசமாக்கும் வகையில் மின்சார கொள்முதலில் முறைகேடு தொடர்வது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும், மின்வாரியத்தின் வரவு-செலவு கணக்குகளையும், கடன் விபரத்தையும் தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாடு மின்வாரியத்தின் நிதிநிலைமை மிகவும் மோசமாக இருக்கும் நிலையில், அதை சீரமைக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. அதேநேரத்தில் மின்வாரியத்தின் நிதிநிலையை மேலும் மோசமாக்கும் வகையில் மின்சார கொள்முதலில் முறைகேடு தொடர்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததை அடுத்து LSHS எனப்படும் தொழிற்சாலை எரிபொருளைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் கொள்முதல் விலை பெருமளவில் குறைந்துள்ளது. சில பொதுத்துறை நிறுவனங்கள் அவற்றுக்குரிய நிலைக் கட்டணம் ரூ.1.50 தவிர ஒரு யூனிட் ரூ.4.27 என்ற விலையில் மின்சாரம் விற்பனை செய்ய முன்வந்துள்ளன.

ஆனால், அந்த நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்சார வாரியம் மறுத்து விட்டது. மாறாக சில தனியார் நிறுவனங்களிடம் நிலைக் கட்டணம் ரூ.1.50 தவிர ஒரு யூனிட் ரூ.5.05 என்ற விலையில் மின்சாரம் வாங்கிக் கொண்டிருக்கிறது. இதற்காக குறுகிய காலம் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது. தனியார் நிறுவனங்களிடமிருந்து தினமும் 2 கோடி யூனிட் அளவுக்கு மின்சாரம் வாங்கப்படுகிறது.

ஒரு யூனிட்டுக்கு 78 பைசா அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவதால் மின்வாரியத்திற்கு தினமும் ரூ.78 லட்சம் இழப்பு ஏற்படுகிறது. எவ்வளவு காலத்திற்கு இந்த மின்சாரம் வாங்கப்படுகிறது என்பதைப் பொறுத்து மாதத்திற்கு ரூ.23.40 கோடியும், ஆண்டுக்கு ரூ.284.70 கோடியும் வாரியத்திற்கு இழப்பு ஏற்படும்.

இதையெல்லாம் நன்றாக தெரிந்து கொண்டே அதிக விலை கொடுத்து தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சார வாரியம் மின்சாரத்தைக் கொள்முதல் செய்து கொண்டிருக்கிறது. குறைந்த விலையில் மின்சாரம் கிடைப்பதும், அதைவிட அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின்சாரம் வாங்கப்படுவதும் உண்மை தான் என்று தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவரே ஒப்புக்கொண்டிருப்பதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சில விதிகளை வகுத்துள்ளது. அதன்படி சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரத்தை மட்டும் தான் வாங்க வேண்டும். ஆனால், விதிகளை காற்றில் பறக்கவிட்டு அதிக விலைக்கு மின்சாரம் வாங்க மின் வாரியம் முடிவு செய்திருக்கிறது என்றால் அதன் பின்னணியில் ஊழல் நடந்திருக்கிறது என்று தான் பொருளாகும்.

இந்தியாவிலேயே மிக மோசமான நிலையில் உள்ள மின்வாரியங்களில் தமிழ்நாடு மின்சார வாரியமும் ஒன்று. கடந்த 10 ஆண்டுகளில் தான் மின்வாரியத்தின் கடன்சுமை மின்னல் வேகத்தில் அதிகரித்தது. கடந்த ஆண்டு நிலவரப்படி தமிழ்நாடு மின்வாரியத்தின் கடன்சுமை ஒன்றரை லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி விட்டது. மின்சார வாரியத்தின் கடன்சுமை அதிகரித்ததற்கான காரணங்களில் முக்கியமானது தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கியது தான் என்பது அனைவரும் அறிந்ததே.

உதாரணமாக தமிழகத்தின் ஒட்டுமொத்த மின் தேவையில் 40 விழுக்காடு மின்சாரத்தை மின்சார வாரியம் நேரடியாக உற்பத்தி செய்கிறது. 30 விழுக்காடு மின்சாரம் பொதுத்துறை மின் நிறுவனங்களிடம் இருந்து பெறப்படுகிறது. மீதமுள்ள 30% மட்டுமே தனியாரிடம் வாங்கப்படுகின்றன.

2013-14 ஆம் ஆண்டில் 40% மின்சாரத்தை தயாரிக்க ரூ.7613 கோடி மட்டுமே செலவாகியிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களிடம் வாங்கிய மின்சாரத்திற்கு விலையாக சுமார் ரூ.9000 கோடி மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து வாங்கிய அதே அளவு மின்சாரத்தை தனியாரிடமிருந்து ரூ.21,000 கோடிக்கு மின்வாரியம் வாங்கியிருக்கிறது என்பதிலிருந்தே அதற்கு எவ்வளவு கூடுதல் விலை தரப்படுகிறது; அதில் எவ்வளவு ஊழல் நடந்திருக்கும் என்பதை உணரலாம்.

முந்தைய திமுக ஆட்சியும், இப்போதைய அதிமுக ஆட்சியும் தமிழ்நாடு மின்வாரியத்தை பணம் காய்க்கும் மரமாக கருதி ஊழல் செய்கின்றன. ஆட்சியின் கடைசிக்காலத்தில் கூட மின்சார வாரியத்தை சுரண்ட வேண்டும் என்பதற்காகத் தான் இப்போதும் அதிக விலைக்கு மின்சாரத்தைக் கொள்முதல் செய்கிறார்கள். இதற்கெல்லாம் மக்களுக்கு ஆட்சியாளர்கள் பதில் கூறியாக வேண்டும்.

ஆட்சியாளர்களின் ஊழல் காரணமாக 2014 ஆம் ஆண்டில் மின்கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறப்படுகிறது. அதனால் தான் 2014 - 15 நிதியாண்டு முடிந்து 10 மாதங்களாகியும் அதற்கான வரவு - செலவு கணக்கை மின்சார வாரியம் வெளியிடவில்லை.

ஆட்சியாளர்களின் நிர்வாகத் தோல்வியை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மின்வாரியத்தின் வரவு-செலவு கணக்குகளையும், கடன் விபரத்தையும் தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x