ஆய்வுக்குப் பிறகே புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்: அன்புமணி

ஆய்வுக்குப் பிறகே புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்: அன்புமணி
Updated on
1 min read

கல்வியாளர்கள் குழுவை அமைத்து ஆய்வு செய்த பிறகே புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மத்திய அமைச்சரவையின் முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையிலான வல்லுநர் குழு தயாரித்துள்ள புதிய கல்விக் கொள்கையை மக்களின் கருத்தை அறியும் நோக்குடன் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையில் சில சாதகமான அம்சங்கள் உள்ள போதிலும், அதைவிட ஏழைகளின் கல்விக்கு பாதகமான அம்சங்கள்தான் ஏராளமான இருக்கின்றன.

புதியக் கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக மத்திய அரசு கடைபிடித்த வழிமுறையிலேயே குறைகள் உள்ளன. புதிய கல்விக் கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றுள்ள ஐந்து பேரில், 4 பேர் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள். ஒருவர் மட்டுமே கல்வியாளர். அதனால்தான், இக்கொள்கையில் கல்வியை விட நிர்வாகத்திற்கே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் கல்விக்கு 6% நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோத்தாரி குழு பரிந்துரை செயல்படுத்தப்பட வேண்டும் என்ற அம்சம் பாராட்டத்தக்கது. ஆனால், படிப்பு சரியாக வராத மாணவர்களுக்கு தொழில்பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்பது நமது சமுதாயத்தை மீண்டும் குலக்கல்வி முறைக்கே அழைத்துச் சென்றுவிடும். இதற்கு மாறாக அனைத்து மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் தொழில் பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

வாழ்க்கைக்கும், வேலைவாய்ப்புக்கும் உதவும் வகையில் கல்வி அமைய வேண்டுமெனில், முழுக்க முழுக்க கல்வியாளர்கள் குழுவை அமைத்து புதிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்து, அதன்பின் நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றுவதோடு, பொதுப்பள்ளி மற்றும் அருகமைப் பள்ளி முறையை கட்டாயமாக்க வேண்டும். அனைத்து நிலைகளிலும் தாய்மொழி வழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in