

சென்னை அம்பத்தூர் செட்டியார் அகரத்தை சேர்ந்தவர் லதா. இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1,710 சதுர அடி நிலம் உள்ளது.
இதை விற்பனை செய்ய திருக்குமரன் என்பவருக்கு பொது அதிகாரம் வழங்கியிருந்தார் லதா.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் நேமம் பகுதியை சேர்ந்த மகாதேவன் என்பவர், இந்த இடத்தை விற்பனை செய்வதற்கான பொது அதிகாரம் தன்னிடம் இருப்பது போன்ற பத்திரத்தை போலியாக தயார் செய்து, அந்த நிலத்தை தனது அண்ணன் மகன் சிவகுருவுக்கு பத்திரப்பதிவும் செய்து கொடுத்தார்.
இதுகுறித்து லதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில், மகாதேவன் போலி ஆவணங்களை தயாரித்திருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து நேற்று காலையில் நில அபகரிப்பு வழக்கில் மகாதேவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.