Published : 05 Mar 2014 02:23 PM
Last Updated : 05 Mar 2014 02:23 PM

தமிழக மீனவர்கள் 153 பேரை விடுவிக்க கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 153 பேரையும், அவர்களது 39 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில், "இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு சிறையிலுள்ள தமிழக மீனவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கு ஏற்படும் இழப்புகளை சொல்ல வார்த்தைகளே இல்லை.

கடந்த 3-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 30 மீனவர்களும் காரைக்காலைச் சேர்ந்த 2 மீனவர்களும் பாக் ஜலசந்தி பகுதியில் வழக்கமாக மீன் பிடிக்கும் இடத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண சென்னையில் 27.1.2014 அன்று இலங்கை-தமிழக மீனவர்களிடையே பேச்சு வார்த்தை நடந்தது.

இதன் தொடர்ச்சியாக இரு நாட்டு மீனவர்களிடையே அடுத்த கட்ட பேச்சு வார்த்தையை கொழும்பில் வரும் 13.3.2014 நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த பேச்சுவார்த்தைக்கு முன்பு இலங்கை சிறைகளிலுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நமது மீனவர்கள் 32 பேரையும் அவர்களது 8 படகுகளையும் இலங்கை படையினர் கைதுசெய்தது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை கடற்படையினரின் இந்த விரும்பதகாத செயல், இலங்கையில் வருகிற 13-ஆம் தேதி நடைபெற உள்ள இரு நாட்டு மீனவர்களின் பேச்சு வார்த்தையை சீர்க்குலைக்கும் முயற்சியாக உள்ளது.

இலங்கை கடற்படையினரின் இச்செயல்களை இந்திய அரசு மௌனமாக வேடிக்கை பார்ப்பது, தமிழக மீனவர்களின் நலனிலும் அவர்களது குடும்பத்தின் மீது அக்கறையில்லாமல் இருப்பதையே காட்டுகிறது. இலங்கை சிறைகளில் ஏற்கனவே 116 தமிழக மீனவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை சிறையில் 5 தமிழக மீனவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ளனர். எனவே, தாங்கள் இந்த பிரச்சினையில் உடனடியாக தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தூதரக அளவில் தொடர்பு கொண்டு இலங்கை சிறைகளில் உள்ள 153 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்களது 39 படகுகளை மீட்கவும் வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அக்கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x