

சட்டப்பேரவையில் நேற்று நடந்த நிகழ்வுகள் தமிழகத்துக்கு தலைகுனிவு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற நிகழ்வுகள் மிகுந்த வருத்தமளிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களே பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது கண்டனத்துக்குரியது. இதையொட்டி தமிழ்நாட்டின் பல இடங்களில் வன்முறை நடந்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதை வன்முறையின் மூலமாக செய்துவிட முடியாது. சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையொட்டி ஏற்படுத்தப்பட்டுள்ள பதற்றத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர அனைத்துப் பகுதியினரும் ஒத்துழைக்க வேண்டும். நடைபெறும் நிகழ்வுகள் தமிழகத்துக்கும், ஜனநாயகத்துக்கும் தலைகுனிவை ஏற்படுத்தக் கூடியது.
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.