

தாமிரபரணியின் உற்பத்தி கேந்தி ரமான பொதிகை மலை தற்போது வறட்சியின் பிடியில் சிக்கியிருப்பது குறித்து, அங்கு புனிதப் பயணம் சென்றுவந்த பக்தர்கள் கவலை தெரிவித்தனர். தற்போதைய வறட்சியால் இந்த மலைக்கு ஆன்மிக யாத்திரை செல்ல, கேரள அரசு தடை விதித்திருக்கிறது.
வற்றாத நதியான தாமிரபரணி, மேற்கு தொடர்ச்சி மலையில் திரு நெல்வேலி மாவட்டத்தில் உள்ள பொதிகை மலையில் உற்பத்தியா கிறது. இங்குள்ள பூங்குளம் என்ற இடமே இந்நதியின் பிறப்பிடம். கோடைகாலமான மே மாதத்திலும் கூட மேகக்கூட்டங்கள் சூழ்ந்து, மழைப்பொழிவுடன் குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவும் பகுதி இது.
மேற்கு தொடர்ச்சி மலையில் ஊட்டி அருகேயுள்ள தொட்ட பெட்டாவை அடுத்த, உயர்ந்த சிகரமான பொதிகை மலை கடல்மட்டத்தில் இருந்து 6,200 அடி உயரம் கொண்டது. இதன் உச்சியில் அமைந்துள்ள அகத்திய பெருமான் கோயிலைத் தரிசிக்க, வாகனங்கள் செல்ல முடியாத அடர் வனத்தின் வழியே, இரண்டு நாள் இரவு, 3 நாள் பகல் என்று கடுமையான நடைபயண யாத் திரையை பக்தர்கள் மேற்கொள் கின்றனர்.
தமிழக வனத்துறை தடை
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரை திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், காரையாறு அணை, பாணதீர்த்தம் அருவி மற்றும் பேயாறு உள்ளிட்ட காட்டாறுகளைக் கடந்து, பொதிகைக்குப் பக்தர்கள் சென்று வந்தனர். களக்காடு- முண்டந்துறை புலிகள் சரணாலய பாதுகாப்பைக் காரணம் காட்டி, இவ்வழியாக பொதிகை மலை செல்வதற்கு, 15 ஆண்டுகளுக்கு முன் தமிழக வனத்துறை தடை விதித்துவிட்டது.
கேரளம் அனுமதி
இருப்பினும், மலையின் மறுபக் கத்தில் உள்ள திருவனந்தபுரம் வழியாக பொதிகை யாத்திரை செல்ல, கேரள வனத்துறை அனுமதிக்கிறது. ‘ஆன்லைன்’ மூலம் முன்பதிவு செய்பவர்களை, உரிய கட்டணம் பெற்றுக்கொண்டு, பயிற்சி பெற்ற காணிகள் துணை யுடன் பொதிகைக்கு அழைத்துச் செல்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் சிவராத்திரி வேளை யிலும், அதன்பின், மே மாதத்திலும் மட்டும் இப்பயணத்தை கேரள வனத்துறை அனுமதிக்கிறது. தாமிரபரணியில் எப்போதும் தண்ணீர் ஓட வேண்டும் என, பொதிகை மலையில் வீற்றிருக்கும் அகத்தியரை வேண்டி, பக்தர்கள் அங்கு சிறப்பு பூஜைகள் நடத்துவர்.
கடும் வறட்சி
பொதிகை மலையில் நடப்பு ஆண்டு கடும் வறட்சி நிலவுவதால் மேகக்கூட்டங்களையே காண முடியவில்லை என்று, கடந்த சிவராத்திரியை முன்னிட்டு இங்கு யாத்திரை மேற்கொண்டவர்கள் ஏமாற்றம் தெரிவித்தனர். கடந்த வாரம் பொதிகை மலை யாத்திரை சென்று வந்த, திருநெல்வேலி தச்சநல்லூரைச் சேர்ந்த ஆறுமுக பெருமாள் கூறியதாவது:
‘‘பொதிகை மலையில் மேகக் கூட்டங்கள் அதிகமாக இருக்கும். கோடையின் போதும், செல்லும் வழியெங்கும் நீர் ஊற்றுகளும், அருவிகளும் அதிகமாக காணப் படும். போகுமிடமெல்லாமல் அட்டைப்பூச்சி கடித்து, ரத்தம் வந்து விடும். மழையில்லாததால், இம்முறை அட்டை கடியில்லை. ஆங்காங்கே உள்ள நீர் ஊற்றுகள் நின்றுவிட்டன. 2-ம் நாள் பயணத் தில் அருகில் உள்ளவர்களைக் கூட பார்க்க முடியாத அளவுக்கு மேகக்கூட்டம் இருக்கும். ஆனால், நடப்பாண்டு மேகக்கூட்டத்தை காணவே முடியவில்லை. வனமெங் கும் வெயில் சுட்டெரித்தது. இதே நிலை நீடித்தால் தாமிரபரணி வற்றிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது” என்றார்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த யாத்ரீகர் உச்சிமாகாளி கூறும் போது:
பல ஆண்டுகளாக பொதிகை மலைக்குச் சென்று வருகிறேன். அங்கு தற்போது குளிர்ச்சியான சூழல் இல்லை. வறட்சியால் புற்பூண்டு கள் வாடியிருக்கின்றன. இந்த வறட்சி மாறி, மழை வளம் கிடைக்க வேண்டும் என வேண்டி வந்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கேரளம் திடீர் தடை
பொதிகை மலையில் வறட்சி நிலவுவதால் மகா சிவராத்திரிக்கு பிந்தைய மலை யாத்திரைக்கு கேரள வனத்துறை தற்போது தடைவிதித்திருக்கிறது. இந்த தடை 1 மாதம் வரை நீடிக்கும் என்று தெரிகிறது. இதனால், பொதிகை மலைக்கு தமிழக, கேரள பக்தர் கள் செல்வதில் முடக்கம் ஏற்பட்டிருக்கிறது.
வறட்சி காரணமாக பொதிகை மலைக்குச் செல்லும் பாதையெங்கும் காய்ந்திருக்கும் வனப்பகுதி. (அடுத்த படம்) யாத்திரையின்போது, 6,200 அடி உயரத்தில் உள்ள பொதிகை மலையின் மீது கயிற்றைப் பிடித்து ஏறும் பக்தர்கள். (உள் படம்) பொதிகை மலையின் மீது வீற்றிருக்கும் அகத்திய பெருமான்.