

ரஜினிகாந்த் என்ற நடிகர் மீதுள்ள ஈர்ப்பு, கோடிக்கணக்கான ரசிகர்களை அவர் கவர்ந்து வைத்துள்ளதும் மட்டுமே அரசியலில் அவருக்கு வெற்றியைப் பெற்றுத்தந்துவிடாது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மே 15-ம் தேதி ரஜினிகாந்த தனது ரசிகர்களுடனான ஐந்து நாள் சந்திப்பைத் தொடங்கினார். 12 வருடங்களுக்குப் பிறகு ரசிகர்களை சந்திப்பதால் ஏற்பட்டிருந்த எதிர்பார்ப்பும் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் வெற்றிடம் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்பும் ரஜினி என்ன சொல்வார் என்று அனைவரையும் எதிர்நோக்க வைத்திருந்தது.
முதல் நாள் சந்திப்பில் வழக்கம்போல் "ஆண்டவன் நினைத்தால் அரசியலுக்கு வருவேன். அப்படி வரும்போது பணம் சம்பாதிக்க நினைக்கும் ஆட்களை எல்லாம் அருகில் சேர்க்க மாட்டேன்" என்றார். என அவர் கூறிச்செல்ல அது ஒரு விவாத கருப்பொருள் ஆனது.
கடைசி நாளான மே.19-ல் அவர் பேசிய பேச்சு அவரது அரசியல் பிரவேச முடிவை கிட்டத்தட்ட உறுதி செய்வதாகவே அமைந்தது. "ஜனநாயக அமைப்பு முறையில் மாற்றம் வேண்டும். மக்கள் மனநிலையை மாற்ற வேண்டும். அப்போதுதான் இந்த நாடு உருப்படும். போர் வரும்போது பார்த்துக் கொள்வோம்" என அவர் கூறியிருந்தார்.
இது தொடரொஆக 'தி இந்து' குழும தலைவர் என்.ராம் கூறும்போது, "நடிகர் ரஜினிகாந்தின் பேச்சு அவர் அரசியலுக்கு வருவார் என்பதை சூசகமாக அதேவேளையில் அதை மிகவும் உறுதியாகவே எடுத்துரைத்துள்ளது. அதுவும் ஆளும் அதிமுக ஒழுங்கற்ற நிலையில் இருக்கும்போது ரஜினிகாந்தின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்தது.
இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக வருவாரோ என்று யோசிக்க வைத்தவர் நடிகராக இருந்து அரசியலில் ஈடுபட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த். ஆனால் அவர் இப்போது வாக்குவங்கியில் பின்தங்கியிருக்கிறார்.
இதையே ஒரு சான்றாக எடுத்துக்கொண்டால் ரஜினி தீவிர அரசியலில் ஈடுபடுவது என்பது அவருக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும். சினிமா கவர்ச்சியும், ஈர்ப்பும் மட்டுமே அரசியல் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துவிடாது.
அரசியலில் வெற்றி பெற, அரசியல் சார்ந்த சாதுர்யம், பிரச்சினைகளை சீர்தூக்கிப் பார்க்க அனுபவ ரீதியான அணுகுமுறை, சில நேரங்களில் சலிப்பூட்டும் வேலை எனத் தெரிந்தும்கூட கடுமையான உடல் உழைப்பைத் தருவது, தொண்டர்கள் எளிதாக அணுகக்கூடியவராக அவர்களுடன் நட்பு பாராட்டக்கூடியவராக இருப்பது என பல பண்புகள் தேவைப்படுகின்றன" என்றார்.
என்.ராம் மேலும் கூறும்போது, "ரஜினிகாந்த் எளிமையானவர், விளம்பரங்களை விரும்பாதவர் என்றாலும் முழுக்க முழுக்க ரசிகர்களை மட்டுமே மையப்படுத்தி உருவாக்கப்படும் ஒரு கட்சி சாய்க்கப்படும் என்பதே அரசியல் சமன்பாடு. அவருக்காக அவருடைய ரசிகர்கள் வருவார்கள். ஆனால், அவர்களுக்கு அரசியல் தெரியாது. அரசியலில் அவர்கள் வளர்த்தெடுக்கப்படவில்லை என்பதே பலவீனம்தான். சூப்பர்ஸ்டாரும் அவரது ரசிகர்களும் மட்டும்தான் கட்சி என்றால் அதில் எவ்வித சமத்துவமும் இருக்காது" என்றார்.
1991-96 ஆட்சி முடியும் தருவாயில் அதிமுகவை மீண்டும் தேர்வு செய்தால் ஆண்டவனால்கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியது என கூறியநாள் முதல் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து எல்லோரையும் ஒருவித எதிர்பார்ப்பிலேயே வைத்திருக்கிறார். ஆனால், ஆணித்தரமான முடிவு ஏதும் இதுவரை அவர் எடுக்கவில்லை. அரசியலில் இருக்கும் பெருஞ்சவாலைப் பார்த்து அவர் அடுத்தக்கட்டத்துக்கு நகராமலேயே காத்திருந்தார். ஒருகட்டத்தில் ஜெயலலிதாவுடன் சமரசம் செய்துகொண்டு தனது தொழிலில் கவனம் செலுத்தத் துவங்கினார் என்பது கவனிக்கத்தக்கது.
'உகந்த சூழல்'
மீடியா டெவலப்மென்ட் பவுண்டேஷனின் நிர்வாக இயக்குநர் சசிகுமார் கூறும்போது, "ரஜினிகாந்த் ஒருவேளை தேர்தலில் போட்டியிட்டால் அவர் மற்ற கட்சிகளுக்கு நல்ல போட்டியாளராக இருப்பார். அவருடைய நடிப்புத் தொழில் ஒரு சமநிலையை அடைந்துவிட்டது. கம்ப்யூட்டர் கிராபிக்ஸும், மென்பொருள் சாகசங்களும் அவருடைய நடிப்புக்கு பலம் சேர்க்கத் தேவைப்படுகின்றன. எந்திரனும், கபாலியுமே அதற்குச் சாட்சி. இத்தகைய சூழலைத்தான் ரஜினி அரசியலில் தான் நுழைவதற்கு சாதகமாகக் கருதியிருக்கிறார்" எனக் கூறியுள்ளார்.
ஆளும் அதிமுக ஸ்திரமற்ற நிலையில் இருக்கும்போது மேம்போக்காக பார்க்கும்போது ரஜினிக்கு இது சாதகமான சூழலே. ஆனால், வாக்குவங்கி சாதி சார்ந்து அமைந்துள்ள தமிழகம் போன்ற ஒரு மாநிலத்தில் ரஜினிகாந்த தனக்கென ஒரு வாக்குவங்கியை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல.
பாஜக ஆதரிக்கிறதா?
"ரஜினியை பாஜக தன் பக்கம் இழுக்கப்பார்க்கிறது என்ற பேச்சு கடந்த மக்களவைத் தேர்தலின்போது மோடி - ரஜினியை சந்தித்தநாள் முதலே பேசப்படுகிறது. இந்தமாதிரியான சூழலில்தான் ரஜினிகாந்த் போர் பற்றி பேசியிருக்கிறார். இப்போது எனக்கு கிரேக்க வரலாற்றின் ட்ரோஜன் குதிரை நினைவுக்கு வருகிறது. பாஜக கையில் இரு ட்ரோஜன் குதிரையாக ரஜினிகாந்த் ஆகிவிடக்கூடாது" எனக் கூறினார் சசிகுமார்.
என்.ராம் கூறும்போது, "ரஜினிகாந்தை வைத்து தமிழகத்தில் மூன்றாம் நிலை 'சி' லீக் எனக்கூறும் அளவில் இருக்கும் பாஜகவை முதல் வரிசைக்கு 'ஏ' லீகுக்கு கொண்டுவர பாஜக முயற்சிக்கப்படுகிறது என்றால் அது நிச்சயமாக நல்ல முயற்சி இல்லை" என்றார்.
இதேபோல் பிரபல சிமினா விமர்சகர் வி.எம்.எஸ். சுபகுணராஜன் கூறும்போது, "நாம் அனைவரும் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். நாம் இன்று பார்க்கும் ரஜினிகாந்துக்கும் இதற்கு முந்தைய காலகட்டங்களில் பார்த்த ரஜினிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. எந்திரன், கபாலி போன்ற படங்களில்கூட அவரது அடையாளத்தை சில முன்மாதிரிகளைக் கொண்டு பிம்பப்படுத்துகின்றனர். ரஜினி என்பவர் ஒரு பிம்பமாகவே அதிகம் அறியப்படுகிறார்" என்றார்.