

உத்தராகண்டில் திருவள்ளுவர் சிலையை அவமதித்தது உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை அவமானப்படுத்தியதற்கு சமம் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித் துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் கூறிய கருத்துகள் வருமாறு:
தேமுதிக தலைவர் விஜய காந்த்:
திருவள்ளுவரின் 12 அடி உருவச் சிலையை உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நிறுவு வதற்கான முயற்சியை பாஜக மூத்த தலைவர் தருண் விஜய் மேற்கொண்டார். ஹரித்துவார், கங்கை கரையோரம் உள்ள சங்கராச்சாரியார் சதுக்கம் ஆகிய இடங்களில் சிலையை நிறுவ முயற்சி எடுத்தபோது அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் தாம்கோதி என்ற இடத்தில் சிலை நிறுவப்பட்டது. அந்த சிலை தற்போது கருப்பு பிளாஸ்டிக்கால் சுற்றப்பட்டு, புல் தரையில் கிடத்தி வைக்கப்பட்டுள்ளது. உலகளாவிய கருத்துகளை தன் எழுத்து மூலம் இந்த உலகுக்கு அர்ப்பணித்த அந்த மகானின் சிலைக்கே சாதி சாயலை பூசியவர்கள் மனித பிறவிகள் தானா? இது தமிழ் இனத்துக்கே ஏற்பட்ட அவமானமாகும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்:
அனிச்சம் மலரை முகர்ந்தாலே வாடிவிடும், அதுபோல முகம் மலராமல் வரவேற்றாலே விருந்தினர் வாடி நிற்பர் என்று குறள் எழுதிய திருவள்ளுவரின் சிலையை விருந்தினராக ஹரித் துவாருக்கு எடுத்துச் சென்று ஒவ்வொரு இடமாக அலைக்க ழித்து, இறுதியில் குப்பையோடு குப்பையாக போட்டுள்ளனர். இது உலகம் முழுவதும் வாழும் 10 கோடி தமிழர்களுக்கும் இழைக்கப் பட்ட பெரிய அவமானமாகும். இதற்கு உத்தராகண்ட் அரசும், பாஜகவின் தருண் விஜய்யும் தான் காரணம். ஹரித்துவாரில் உள்ள வள்ளுவரின் சிலையை தமிழக அரசு உடனடியாக மீட்டு தமிழகத் துக்கு கொண்டுவர வேண்டும்.
பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்:
கங்கைக் கரையில் திருவள்ளுவர் சிலையை அமைக்க வேண்டும் என்பதை பாஜக விளம்பரத்துக்காக செய் யவில்லை. உணர்வுப்பூர்வமான விஷயத்தை அரசியல் ஆக்கி கொச்சைப்படுத்த வேண்டாம். உத்தராகண்ட் மாநில அரசு ஒப்புக் கொண்டதன் அடிப்படையில்தான் அங்கு சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டது. திருவள்ளுவர் சிலை உத்தராகண்டில் அமைய அம்மாநில காங்கிரஸ் அரசுக்கு தமிழக கட்சிகள் அழுத்தம் தர வேண்டும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:
கங்கைக் கரையில் கம்பீரமாக நிற்கும் என்று அனுப்பி வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை, ஹரித்துவார் பூங்காவில் ஒரு மூலையில் கிடக்கிறது. திருவள்ளுவருக்கே சாதி சாயம் பூசி, அவரது சிலையை நிறுவ இந்துத்துவ சக்திகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருவள்ளு வருக்கு இழைக்கப்பட்ட அவ மரியாதை மன்னிக்கக் கூடியது அல்ல.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:
பிறப்பால் அனைவரும் சமம் என்று சொன்ன திருவள்ளு வரை இந்து தர்மத்தையும் சாதிய கட்டமைப்பையும் பின்பற்றும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவால் ஏற்க முடியாது. திருவள்ளுவரின் புகழை பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பில் உள்ளவர்களிடம் தருண் விஜய் எடுத்துக்கூற வேண்டும். அப்படி அவர்கள் ஏற்கவில்லை என்றால், பாஜகவில் இருந்து அவர் விலக வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்:
உரிய ஏற்பாட்டை செய்துவிட்டுதான் திருவள்ளுவர் சிலையை ஹரித் வாரில் வைத்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதால் இத்தகைய அவலநிலை ஏற்பட் டுள்ளது. இந்நிலை ஏற்படுவதற்கு காரணமானவர்கள் தார்மீக பொறுப்பேற்று நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே. வாசன்:
ஹரித்துவாரில் திருவள் ளுவர் சிலையை நிறுவுவதில் எழுந்துள்ள சர்ச்சை சஞ்சலத்தை தருகிறது. திருவள்ளுவரின் சிலை எங்கு அமைந்தாலும் அதனால் அந்த இடத்துக்கும், அப்பகுதி மக்களுக்கும்தான் பெருமை. எனவே, திருவள்ளுவரின் சிலை உரிய இடத்தில் நிறுவப்பட வேண்டும்.
விசிக தலைவர் திருமாவளவன்:
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க் கும்’ என்று கூறிய திருவள்ளு வரையே தலித் என்று கூறி, அவரது சிலையை நிறுவ எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது பாஜகவின் இந்துத்துவ முகத்தையும் அவர்களின் காவிமயமாக்கலையும் காட்டுகிறது. இந்த விஷ யத்தில் மாநில அரசு தலையிட்டு பிரச்சி னைக்கு தீர்வு காண வேண்டும்.