

கோவையின் குடிநீர்த் தேவையை சிறுவாணி, பில்லூர்-1, பில்லூர்-2, ஆழியாறு குடிநீர்த் திட்டங்கள் மூலம் சமாளிக்கின்றனர். மேலும், பில்லூர்-3 குடிநீர்த் திட்டமும் முடியும் தருவாயில் உள்ளது.
பில்லூர்-1, 2-ம் குடிநீர்த் திட்டங்களுக்கான தண்ணீர் பில்லூர் அணையிலிருந்து குழாய்கள் மூலம் கொண்டுவரப்பட்டு வெள்ளியங்காடு கிராமத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களில் தூய்மைப்படுத்தப்படுகிறது.
பில்லூர் 1-ம் திட்டத்தில் தினமும் சுமார் 6.5 கோடி லிட்டரும், 2-ம் திட்டத்தில் சுமார் 10 கோடி லிட்டரும் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதை சுத்திகரிக்கும்போது சாதாரண நாட்களில் சுமார் 3 லட்சம் லிட்டரும், மழைக் காலங்களில் 7 முதல் 10 லட்சம் லிட்டரும் வெளியேற்றப்படுகிறது. இந்த உபரிநீர் அருகில் உள்ள குளம், குட்டைகளில் விடப்படுகிறது. அவை நிரம்பியவுடன், பாறைப்பள்ளம், குண்டுப்பள்ளம் நீரோடைகள் வழியாக 15 கிலோமீட்டர் தொலைவுசென்று, தேக்கம்பட்டி அருகே பவானியுடனே கலக்க வேண்டும். இந்தப் பகுதியில்தான் பில்லூர் 3-ம் குடிநீர்த் திட்டத்தின் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த 15 கிலோமீட்டர் தொலைவுக்குச் செல்லும் உபரி நீரால் வழியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட குட்டைகள், 15-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பும். அதனால், வெள்ளியங்காடு, செம்பாரம்பாளையம், முத்துக்கல்லூர், முத்துக்கல்லூர் கிழக்கு பகுதி, பாறைப்பள்ளம், பனைப்பாளையம் புதூர், சாலைவேம்பு, ரங்கராஜபுரம், தேவனாபுரம் வடக்கு, தேக்கம்பட்டி, நஞ்சேகவுண்டன்புதூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும்.
ஆனால், இதற்கு பாதகம் விளைவிக்கும் வகையில் சில விவசாயிகளும், தனியார் நிறுவனங்களும் சுத்திகரிப்பு நிலையம் உள்ள பகுதியில் உபரி நீரை மோட்டார்கள் மூலம் உறிஞ்சி 5 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள நிலங்களுக்குகூட கொண்டு செல்கின்றனர். இதனால், பல கிராமங்களில் வறட்சி ஏற்பட்டு, 650 அடி ஆழத்துக்கு நிலத்தடி நீர்மட்டம் சென்றுவிட்டது. இது தொடர்பாக பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள பகுதியிலேயே ஆயில் இன்ஜின் மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சுகின்றனர். மேலும், ஒரு கிலோமீட்டர் தொலைவில் பாறைப்பள்ளத்தில் செல்லும் உபரி நீரை, ஒரு கிணறுதோண்டி சேமிக்கின்றனர். மேலும், 20 ஹெச்.பி. திறன்கொண்ட, சூரியஒளி மின் மோட்டார்களைப் பயன்படுத்தி பள்ளத்து ஓடையிலிருந்து தண்ணீரை உறிஞ்சி, கிணற்றுக்குள் விடுகின்றனர். இந்த நீரை 60 ஏக்கர் நிலங்களுக்கு சிலர் பங்கிட்டுக் கொள்வதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர். ஓடை செல்லும் பகுதியில் பல இடங்களில் மின்சாரம், சூரியஒளி, ஆயில் இன்ஜின் மோட்டார்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சுகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டபோதே நிலத்தடி நீர் பாழாகும் என்று கூறி சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், பல விவசாயிகள் சுத்திகரிப்பு நிலையத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அதிகாரிகள் உபரி நீரை பெரிய குழாய் வழியே நேரடியாக பள்ளத்துக்கு கொண்டுசென்றனர். அப்போதே சில விவசாயிகள் மோட்டார் பம்ப்செட் மூலம் நீரை உறிஞ்சினர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் தட்டிக்கேட்டதால் பிரச்சினை ஏற்பட்டது.
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கேட்டபோது, புறம்போக்கு நிலத்தில் வரும் நீரை எடுப்பதை நீங்கள் எப்படி தடுக்கலாம் என்றனர். இதையடுத்து, உபரி நீர் செல்லும் திசையை மாற்றி, அருகில் உள்ள பெரிய குட்டையில் அதிகாரிகள் தண்ணீரை திருப்பிவிட்டனர்.
அந்த குட்டை நிரம்பினால் கண்டியூர் வாய்க்கால் வழியே வெளியேறும் உபரி நீர் குண்டுப்பள்ளத்தில் சேரும். எனினும், அதிக அளவு நீர் நிரப்பும்போது, குட்டைக்கு அருகில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் ஊறி, பயிர்கள் அழுகின.
இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க, குட்டையில் ஓரளவு தண்ணீர் நிரம்பினால் சுத்திகரிப்பு மையத்துக்கு எதிரில் உள்ள பழைய குழாய் வழியே திருப்பி, மறுபடியும் ஓடைக்கு தண்ணீர் விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அதை பார்த்து சிலர் குட்டைக்குள்ளேயே நிரந்தரமாக சில ஆயில் இன்ஜின் மோட்டார்களை வைத்து தண்ணீர் உறிஞ்சி 5 கிலோமீட்டர் வரை கொண்டுசென்றனர். தண்ணீரை உறிஞ்சிக் கொடுப்பதற்காகவே விவசாயிகள் ஒரு ஒப்பந்ததாரரையும் நியமித்திருந்தனர்.
இது தொடர்பாக ஆட்சியரிடம் முறையிட்டதால், 6 மாதங்களுக்கு முன் ஆயில் இன்ஜினை கழற்றிச் சென்றுவிட்டனர். எனினும், குட்டைக்குள் தண்ணீர் நிரம்பி வாய்க்கால் வழியே சென்றால் ஒரு கிலோமீட்டர் தொலைவில் சூரியஒளி மின்சாரம் மூலம் தண்ணீர் எடுக்கின்றனர்.
குட்டையை ஓரளவுக்கு நிரப்பிவிட்டு, வேறு வழியில் பள்ளத்துக்கு தண்ணீரை விட்டால் ஆயில் இன்ஜின் மற்றும் மின் மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி, குழாய் வழியே கொண்டுசெல்கின்றனர். சிலர் ஓடையில் தடுப்புச்சுவர் எழுப்பி, அங்கேயே மோட்டார் வைத்து தண்ணீரை அவர்களது தோட்டத்துக்கு கொண்டுசெல்கின்றனர். சுமார் 2 ஆயிரம் விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும், வழியோரக் காடுகளில் உள்ள விலங்குகளுக்கும் பயன்பட வேண்டிய தண்ணீரை சுமார் 50 பேர் மட்டும் பயன்படுத்துகிறார்கள் என்றனர்.
இப்பகுதி விவசாயி ஆர்.மூர்த்தி கூறும்போது, “இதற்கான மின் மோட்டார்களும் இலவச மின்சாரத்திலேயே இயக்கப்படுகின்றன. மானியத்துடன் கூடிய சூரியஒளி மின்சாரத்தில்தான் தண்ணீர் திருடப்படுகிறது. அதேபோல, ஆயில் இன்ஜினுக்கான செலவையும் விவசாயிகள் பகிர்ந்துகொள்கின்றனர். கோடைகாலத்தில் பிரச்சினை பெரிதாகும்போது அதிகாரிகளிடம் முறையிடுவோம். அவர்கள் நடவடிக்கை எடுப்பதற்குள் மழை வந்துவிடும். அத்துடன் அந்தப் பிரச்சினை முடிந்துவிடும். எனவே, இதற்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டுமென்று விவசாயிகள் முறையீட்டுக் கூட்டத்தில் அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளோம்” என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி கூறும்போது, “இந்தப் பிரச்சினையால் 30-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் வறண்டுவிட்டன. நிலத்தடி நீர்மட்டம் 650 அடிக்கு கீழே சென்றுவிட்டது. ஆதிமாதையனூர் கிராமத்தில் 50 விவசாயிகள் ரூ.1.50 கோடி செலவில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்தும், தண்ணீர் வரவில்லை. எனவே, ஓடையில் நேரடியாக தண்ணீர் உறிஞ்சுவதையும், தடுப்பணை, தடுப்புச் சுவர் அமைத்து தண்ணீர் எடுப்பதையும் தடுக்க வேண்டும். இல்லையேல் விவசாயிகளை திரட்டிப் போராட்டம் நடத்துவோம்” என்றார்.
அத்துமீறும் தனியார் நிறுவனம்?
இந்த உபரி நீர் செல்லும் பாதையில் உள்ள தனியார் ஆலை நேரடியாக பவானியிலிருந்து தண்ணீர் எடுப்பதாகவும், அது வெளியிடும் கழிவுகளால் நிலத்தடிநீர் கெட்டுப்போவதாகவும் விவசாயிகள் பல ஆண்டுகளாக குற்றம்சுமத்தி வருகின்றனர். வனத் துறையும் எதிர்ப்பு தெரிவித்ததால், பவானியில் நேரடியாக தண்ணீர் எடுப்பதில்லை. மாறாக, வெள்ளியங்காடு குட்டை முழுமையாக நிரம்பும்போது, கண்டியூர் வாய்க்கால் மூலம் தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அதற்காகவே அந்த நிறுவனம் 10-க்கும் மேற்பட்ட ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்துள்ளதாகவும், அதற்காகவே சுத்திகரிப்பு நிலையம் அருகே உள்ள குட்டை முழுமையாக நிரப்பப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், நீரை உறிஞ்சுவோர் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கும்போது, ஆளுங்கட்சி அரசியல் பிரமுகர்களின் பெயரைப் பயன்படுத்துவதால், அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட தயக்கம் காட்டுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.