

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் வெளித்துறைமுக விரிவாக்கத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, அதற்கு பதிலாக பெரிய கப்பல்கள் வரும் வகையில் உள்துறைமுக பகுதி மேம்படுத்தப்படவுள்ளதாக, துறைமுக பொறுப்புக் கழக தலைவர் ச.ஆனந்த சந்திரபோஸ் தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் நேற்று அளித்த பேட்டி:
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் வெளித்துறைமுக விரிவாக்க திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கைவிடப்படவில்லை. உள்துறைமுகத்தின் முழு திறனும் முழுமையாக பயன்படுத்தப்பட்ட பிறகு, வெளித்துறைமுக விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்படும்.
தற்போது, உள்துறைமுக பகுதியில் மிதவை ஆழம் 12.8 மீட்டராக உள்ளது. இது, 14.5 மீட்டராக ஆழப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் 85 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட பெரிய கப்பல்கள் இத்துறைமுகத்துக்கு வர முடியும்.
மேலும், ரூ. 200 கோடியில் எண்ணெய் தளத்தை நிலக்கரி தளமாக மாற்றும் பணி, வடக்கு அலை தடுப்பு பகுதியில் கூடுதல் தளம், புதிய நிலக்கரி தளம், நிலக்கரி தளங்களை இயந்திர மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
திறன் அதிகரிக்கும்
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் தற்போதைய சரக்கு கையாளும் திறன் 44 மில்லியன் டன்களாக உள்ளது. உள்துறைமுக பகுதியில் மேற்கொள்ளப்படும் இந்த பணிகள் மூலம் 40 முதல் 45 மில்லியன் டன் வரை சரக்கு கையாளும் திறன் அதிகரிக்கும்.
உள்துறைமுகத்தின் முழு திறனும் பயன்படுத்திய பிறகு வெளித்துறைமுக விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டதற்கும், இனயம் துறைமுகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இனயம் துறைமுக பணிகளுக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இதுவரை ரூ. 10 கோடி மட்டுமே நிதி வழங்கப்பட்டுள்ளது.
பயணிகள் கப்பல்
தூத்துக்குடி- கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க துறைமுக நிர்வாகம் தயாராக இருக்கிறது. ஆனால், கப்பலை இயக்க எந்த நிறுவனமும் முன் வரவில்லை. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சார்பில் `சாகர் மாலா’ திட்டத்தின் கீழ் ரூ. 23.77 கோடி மதிப்பீட்டில் மீன்வளக் கல்லூரி எதிரே அதிநவீன லாரி நிறுத்தும் முனயம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், துறைமுகம் சார்பில் தற்போது ரூ. 2,311.44 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், 1,014.85 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
துறைமுக துணைத் தலைவர் சு.நடராஜன், தலைமை இயந்திரவியல் பொறியாளர் பி.ரவீந்திரன், போக்குவரத்து மேலாளர் யு.ராஜேந்திரன், தலைமை பொறியாளர் எஸ்.எஸ்.பி.பாட்டீல், தலைமை கணக்கு அலுவலர் எஸ்.சாந்தி உள்ளிட்ட துறை தலைவர்கள் உடனிருந்தனர்.
2016-17-ம் ஆண்டு லாபம் ரூ. 102 கோடி
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 2016-17-ம் நிதியாண்டில் ரூ. 101.87 கோடி நிகர உபரி வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட ரூ. 1.53 கோடி குறைவாகும். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் 2016-17-ம் ஆண்டின் செயல்பாடுகள் குறித்து, துறைமுக பொறுப்புக் கழக தலைவர் ச.ஆனந்த சந்திரபோஸ் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2016-17-ம் நிதியாண்டில் 1,662 கப்பல்களில் இருந்து, 38.46 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது. அதற்கு முந்தைய நிதியாண்டை விட 4.38 சதவீதம் இது கூடுதலாகும்.
இலக்கை எட்டவில்லை
அதேவேளை, மத்திய கப்பல் துறை அமைச்சகம் 39.50 மில்லியன் டன் சரக்கு கையாள இத்துறைமுகத்துக்கு இலக்கு நிர்ணயித்திருந்தது. இதைவிட 2.83 சதவீதம் குறைவாகவே சரக்கு கையாளப்பட்டுள்ளது. நிலக்கரி 17.06 சதவீதம், உரம் மூலப்பொருள் 5.73 சதவீதம், பெட்ரோலிய பொருட்கள் 4.7 சதவீதம் இறக்குமதி குறைந்தது. இதனை கோதுமை மூலம் ஈடுகட்ட துறைமுகம் முயற்சி மேற்கொண்டது. இருப்பினும் முழுமையாக ஈடுகட்ட முடியவில்லை.
கடந்த 2016-17-ம் ஆண்டில் 6,42,098 சரக்கு பெட்டகங்கள் கையாளப்பட்டுள்ளன (4.97 சதவீதம் கூடுதல்). 27.99 மில்லியன் டன் சரக்கு இறக்குமதியானது (2.30 சதவீதம் கூடுதல்). 10.46 மில்லியன் டன் சரக்கு ஏற்றுமதியானது (10.38 சதவீதம் கூடுதல்).
ரூ. 102 கோடி லாபம்
துறைமுகத்தின் 2016- 17-ம் நிதியாண்டின் மொத்த வருவாய் ரூ. 694.34 கோடி. மொத்த செலவினம் ரூ. 525.71 கோடி. வரிக்கு முந்தைய நிகர உபரி வருவாய் ரூ. 168.62 கோடியாக இருந்தது. வரி பிடித்தம் போக நிகர உபரி வருவாய் ரூ. 101.87 கோடி.
இது முந்தைய நிதியாண்டை விட ரூ. 1.53 கோடி குறைவாகும். கடந்த 2014- 2015-ல் நிகர உபரி வருவாய் ரூ. 160.54 கோடியாக இருந்தது. தற்போது, செலவுகள் அதிகமாக இருந்ததால் நிகர உபரி வருவாய் குறைந்துள்ளது, என்றார் அவர்.