Last Updated : 13 Jan, 2017 09:44 AM

Published : 13 Jan 2017 09:44 AM
Last Updated : 13 Jan 2017 09:44 AM

தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை; சசிகலாவை வீழ்த்த தீபாவை தூண்டிவிடும் பாஜக: கி.வீரமணி சிறப்பு பேட்டி

சசிகலாவை வீழ்த்துவதற்காக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை பாஜக தூண்டி விடுகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவுக்கு நீங்கள் ஆதரவு தெரிவிப்பது ஏன்?

என்ன காரணத்துக்காக சசிகலா எதிர்க்கப்படுகிறாரோ, அதற்காகவே அவரை திராவிடர் கழகம் ஆதரிக் கிறது. எம்ஜிஆருக்கும், ஜெயலலிதா வுக்கும் கடவுள் நம்பிக்கை இருந்தது. ஆனாலும், திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிராக அவர்கள் ஒருபோதும் செயல்பட்டதில்லை. இந்த இருவரின் ஆட்சியில்தான் 31 சதவீத இட ஒதுக்கீடு 69 சதவீதமாக உயர்ந்தது. அவர்கள் வழியில் அதிமுகவை வழிநடத்த பிராமணர் அல்லாத பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சசிகலாவால் முடியும் என நம்புகிறோம்.பிராமணர் அல்லாதவர் என்பதுதான் உங்களது அளவுகோலா?

பிராமணர் அல்லாதவர் என்பதால் மட்டும் சசிகலாவை ஆதரிக்க வில்லை. ஜெயலலிதாவின் நிழலாக அவரது வாழ்விலும், தாழ்விலும் 33 ஆண்டுகள் உற்ற துணையாக இருந் தவர். ‘இந்தியாவில் என்றுமே அரசி யல் போராட்டங்கள் நடைபெற்றதே இல்லை. நடப்பவை அனைத்தும் ஆரிய - திராவிட இனப் போராட்டமே’ என்பார் பெரியார். இப்போதும் அது தான் நடக்கிறது. ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்ட சூழலைப் பயன்படுத்தி குறுக்கு வழியில் தமி ழகத்தில் காலூன்ற பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் திட்டமிடுகின் றன. இதை முறியடிக்கவே சசி கலாவை ஆதரிக்கிறோம்.தமிழகத்தில் 2 சதவீத வாக்கு வங்கி யைக் கொண்ட பாஜகவால் 40 சதவீத வாக்கு வங்கியைக் கொண்ட அதிமுகவை கபளீகரம் செய்துவிட முடியுமா?

மத்தியில் அதிகாரத்தில் உள்ளவர் கள் நினைத்தால் முடியும் என்பதே கடந்தகால வரலாறு. அருணாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட்போல தமிழகத்திலும் குழப்பத்தை ஏற் படுத்த பாஜக திட்டமிடுகிறது. தமிழ கத்தில் காலூன்ற என்ன செய்ய லாம் என்பது குறித்து பாஜக தலை வர்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வருகின்றன. சசிகலாவை வீழ்த்துவதற்காக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மூலம் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.தீபாவை இயக்குவது பாஜக என்கிறீர்களா?

சசிகலாவை எதிர்க்க வலிமை யான தலைவர்கள் இல்லாத நிலை யில் உறவு என்ற பெயரில் தீபாவை பாஜக மறைமுகமாகத் தூண்டி வருகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடக்கும் சம்பவங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. ஜெயலலிதா வின் உறவினர் என்பதைத் தவிர தீபாவுக்கு எந்தத் தகுதியும் இல்லை. ஆனால், சசிகலா கடந்த பல ஆண்டு களாக ஜெயலலிதாவுடன் இருந்து அவரது அரசியல் வியூகங்களை உணர்ந்தவர். அது செயல் வடிவம் பெற பெரும் பங்காற்றியவர். எனவே, தீபாவுடன் சசிகலாவை ஒப்பிடுவதே பெரும் தவறு.ஜெயலலிதா மறைவால் தமிழகத் தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ள தாக பாஜக தலைவர்கள் பேசி வருகிறார்களே?

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும், அதிமுக பொதுச்செயலாளராக சசி கலாவும் பதவியேற்றுள்ளனர். எனவே, தமிழக அரசியலில் வெற் றிடம் எதுவும் இல்லை. உண்மையில் வெற்றிடம் இருப்பது ஆளுநர் மாளிகையில்தான். முதலில் அந்த வெற்றிடத்தை நிரப்பிவிட்டு அரசியல் வெற்றிடம் பற்றி பாஜகவினர் பேசட்டும். மிகப்பெரிய மாநிலமான தமிழகத்துக்கு தனியாக ஒரு ஆளுநரை நியமிக்காமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் கொள்கை ரீதியான வேறுபாடுகள் இல்லை என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியிருக்கிறாரே?

இப்படி பேசுவதும்கூட பாஜகவின் சதித் திட்டத்தின் ஓர் அங்கம்தான். ஜெயலலிதாவுக்கு கடவுள், மத நம்பிக்கை இருந்ததால் மட்டும் அதிமுக இந்துத்துவ கட்சியாகி விடாது. இட ஒதுக்கீடு, சமூக நீதி, இந்தி எதிர்ப்பு என திராவிட இயக்கக் கொள்கைளை என்றுமே அதிமுக விட்டுக் கொடுத்ததில்லை. இன்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நிகழ்ச்சியை அதிமுக நடத்துகிறது. பெரியாருக்கு விழா எடுக்கிறது. இதுவெல்லாம் பாஜக வின் கொள்கைகள்தானா என்பதை வெங்கய்ய நாயுடுதான் விளக்க வேண்டும். ஜெயலலிதா பிராமணராக இருந்தாலும், பிராமணர் கட்சியாக அதிமுகவை நடத்தவில்லை.ஜெயலலிதாவுக்காக அதிமுகவுக்கு வாக்களித்தவர்கள், இனி பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்றும் வெங்கய்ய நாயுடு கூறியிருக்கிறாரே?

அவர் தனது ஆசையை கூறி யிருக்கிறார். அதிமுக தொண்டர்கள் திராவிட இயக்கக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள். அதனால் தான் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அதில் உறுதியாக நின்றனர். எனவே, அதிமுகவுக்கு வாக்களித்தவர்கள் ஒருபோதும் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். சமூக நீதிக்கு எதிரான மனநிலை கொண்ட பாஜகவை தமிழர்கள் ஏற்க மாட்டார்கள்.50 எம்.பி.க்களை வைத்துள்ள அதிமுகவை பாஜக பகைத்துக் கொள்ளும் என நினைக்கிறீர்களா?

நாடாளுமன்றத்தில் 50 எம்.பி.க் களுடன் பாஜக, காங்கிரஸுக்கு அடுத்து 3-வது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது. இந்த அசுர பலத்துக்கு முன்பு எந்த அதிகாரமும், அச்சுறுத்தலும் சாதாரணம் என்பதை ஜெயலலிதா நிரூபித்து வந்தார். இதை உணர்ந்து இன்றைய அதிமுக தலைமை செயல்பட வேண்டும். குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் தயவு பாஜகவுக்கு தேவை. இந்தச் சூழலை அதிமுக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அதிமுக திராவிடக் கட்சி என்பதை திராவிட இயக்கத்தினரே ஏற்பதில்லை. ஆனால், நீங்கள் தாய்க் கழகம் என்ற முறையில் சசிகலாவுக்கு வேண்டு கோள் விடுப்பதாக கூறியுள்ளீர்களே?

எங்களைப் பொறுத்தவரை அதிமுகவும் திராவிட கட்சிதான். திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கையான இட ஒதுக்கீடு, சமூக நீதியில் அதிமுக உறுதியாக உள்ளது. 31 சதவீத இட ஒதுக்கீடு 69 சதவீதமாக உயர அதிமுகவே காரணம். வைகோ எடுக்கும் முடிவுகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் மதிமுகவும் திராவிடக் கட்சிதான்.திமுகவை மட்டும் ஆதரித்து வந்த நீங்கள், இப்போது அதிமுகவையும் ஆதிரிக்கிறீர்கள். இரு கட்சிகளையும் ஒன்றாகவே கருதுகிறீர்களா?

திமுக, அதிமுக இரண்டும் திரா விடக் கட்சிகள். ஒரு தாயின் வயிற் றில் பிறந்த அண்ணன் - தம்பி போன்ற இயக்கங்கள். எதிரிகளுக்கு இடம் கொடுக்காமல் இந்த இயக்கத்தில் ஒன்று ஆளுங்கட்சியாகவும், மற் றொன்று எதிர்க்கட்சியாகவும் இருப் பதே பெரியார் கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றியாகும். எந்த ஆட்சி யாக இருந்தாலும் நல்லது செய்தால் பாராட்டுவோம். கொள்கைப் பாதையிலிருந்து விலகிச் சென்றால் தவறுகளை சுட்டிக் காட்டுவோம்.

இவ்வாறு கி.வீரமணி கூறினார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x