பியூஸ் மானுஷ் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்: ஜவாஹிருல்லா

பியூஸ் மானுஷ் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்: ஜவாஹிருல்லா
Updated on
1 min read

தமிழக அரசு இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷ் மீது பதிவு செய்துள்ள வழக்குகளை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இயற்கை ஆர்வலராகவும் சூழலியல் செயல்பாட்டாளராகவும் செயல்பட்டுவரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பியூஸ் மானுஷை தமிழக காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்து சித்திரவதை செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.

கடந்த 2010-ல் சேலம் மக்கள் குழுவைத் தொடங்கி அக்குழுவின் மூலம் அழிவின் விளிம்பில் புதர் மண்டிக்கிடந்த 55 ஏக்கர் பரப்பளவு உள்ள மூக்கனேரியை தூர்வாரி ஏரிக்குள் 50-க்கும் மேற்பட்ட தீவுகளை உருவாக்கி அதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை நட்டவர். இதேபோல சேலம் மாவட்டத்தில் உள்ள பல ஏரிகளை மீட்டெடுத்தவர். சென்னை, கடலூர் பெருவெள்ளத்தின் போது நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவர் பியூஸ் மானுஷ்.

சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட்டில் சில தினங்களுக்கு முன்னர் மேம்பால கட்டுமானப் பணி நடைபெற்ற போது பியூஸ் மானுஷ், கார்த்தி, முத்துச்செல்வம் ஆகியோர் பாலம் கட்ட நிலம் கையகப்படுத்திய பின்னர் கட்டுமானப் பணியைத் தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து கட்டுமானப் பணியை தடுத்ததாகக் கூறி மூவரையும் கடந்த 8-ம் தேதி சேலம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையில் 30க்கும் மேற்பட்ட காவலர்களால் பியூஸ் மானுஷ் கடுமையாக தாக்கப்பட்டும், உணவு வழங்காமலும் அவரை கொடுமைப்படுத்தி வருவதாகவும், கைது செய்யப்பட்ட நாளிலிருந்து தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு மனரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டுவருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

பன்னாட்டு நிறுவனச் சூறையாடல்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக மக்களைத் திரட்டிப் போராடிவரும் சூழலியாளர் மீது நடத்தப்பட்டிருக்கும் இந்த கொலைவெறித் தாக்குதல் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷ் மீது பதிவு செய்துள்ள வழக்குகளை உடனே திரும்பப் பெற வேண்டும்'' என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in