ஆண்டுக்கு ஒருமுறை ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

ஆண்டுக்கு ஒருமுறை ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
Updated on
1 min read

ஆண்டுக்கு ஒருமுறை ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30,000 பேர் இருப்பதால் ஆசிரியர் தகுதித் தேர்வு இப்போதைக்கு நடத்தப்படாது என்று பள்ளிக்கல்வி அமைச்சர் க.பாண்டியராஜன் கூறியுள்ளார். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்கள் ஏற்கனவே தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இது கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிரானதாகும்.

அமைச்சரின் இந்த அறிவிப்பால் இரு வகையான பாதிப்புகள் ஏற்படும். தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு தான் கடைசியாக தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதன்பின் 4 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அதில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் இன்னும் 3 ஆண்டுகளில் காலாவதியாகியாகிடும். அதற்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30 ஆயிரம் பேருக்கும் அரசு வேலை வழங்க முடியாது. அதனால் அடுத்த மூன்றாண்டுகளுக்குள் அவர்கள் மீண்டும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

ஆண்டுக்கு ஒருமுறை இத்தேர்வு நடத்தப்பட்டால் விருப்பப்பட்ட நேரத்தில் அவர்கள் மீண்டும் தேர்வு எழுதி தங்களின் தகுதியை புதுப்பித்துக் கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை பொறுத்து 60 சதவீதம் வரை தகுதிகாண் மதிப்பெண் வழங்கப்படுவதால், ஒருமுறை குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தால் அவர் அடுத்த ஆண்டே மீண்டும் தேர்வெழுதி அவரது தகுதியை உயர்த்திக் கொள்ள முடியும். ஆனால், அமைச்சரின் அறிவிப்பால் இந்த இரு வாய்ப்புக்களும் பறிக்கப்படுகின்றன.

கடந்த 4 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் பல லட்சம் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தகுதித் தேர்வின் அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டிருந்தால், இந்த 30,000 பேருக்கும் எப்போதோ வேலை கிடைத்திருந்திருக்கும். ஆண்டுக்கு ஒருமுறை தகுதித்தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறுவோரைக் கொண்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in