உருவானது ஹெலன் புயல்: ஆந்திரத்துக்கு அச்சுறுத்தல்

உருவானது ஹெலன் புயல்: ஆந்திரத்துக்கு அச்சுறுத்தல்
Updated on
1 min read

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, புயலாக மாறியுள்ளது. 'ஹெலன்' என இந்தப் புயலுக்கு பெயரிடப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து கிழக்கு - வடகிழக்கில் 460 கி.மீ. தொலைவில் ஹெலன் புயல் மையம் கொண்டுள்ளது.

வங்கக் கடலில் இருந்து 650 கி.மீ. தொலைவில் அந்தமான் தீவு அருகே புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று உருவாகியது. இதனால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்தக் காற்றழுத்த தாழ்வு நிலையானது தற்போது மேலும் வலுப்பெற்று புயலாக உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தெற்கு கடலோர ஆந்திரம் பகுதியில் கவாலி அருகே நாளை (வியாழக்கிழமை) இரவு கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இரவு முதலே மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் காற்றும், மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

புயல் உருவாகியுள்ளதால் தமிழகம் மற்றும் ஆந்திராவின் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிறுத்தப்பட்டுள்ளது.

புயல் உருவாகியுள்ளதால் புதுச்சேரி, காரைக்கால், கடலூர், பாம்பனில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும் நாகையில், 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in