

சென்னையில் 5 இடங்களில் நடந்து வரும் தானியங்கி நகரும் நடை மேம்பாலங்களின் (எஸ்கலேட்டர்) பணிகள் முடிந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு இவை மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளன.
சென்னையில் பாதசாரிகள் அதிகமாக செல்லும் இடங்களில் சாலையை எளிதாக கடந்து செல்ல 7 இடங்களில் தானியங்கி நகரும் நடை மேம்பாலம் (எஸ்கலேட்டர்) அமைக்கப்படும் என 2012ல் தமிழக அரசு அறிவித்தது. இதில், முதல்கட்டமாக ஜிஎஸ்டி சாலையில் குரோம்பேட்டை மருத்துவமனை அருகில், ஜிஎஸ்டி சாலையில் தாம்பரம் ஏற்றுமதி மண்டலம் (மெப்ஸ்) அருகில், திருமங்கலம் எஸ்.பி.ஓ.ஏ பள்ளி சாலை சந்திப்பு, தரமணி இணைப்பு சாலை டி.சி.எஸ் அருகில், தரமணி இணைப்புச் சாலையில் பெருங்குடி சாலை சந்திப்பு அருகில் என மொத்தம் 5 இடங்களில் ரூ.28 கோடி செலவில் தானியங்கி நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
90 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த அவை பிறகு மக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பெருங்குடி, குரோம்பேட்டை, மெப்ஸ் ஆகிய 3 இடங்களில் பணிகள் முழுமையாக முடிந்துள்ளன.
தரமணி மற்றும் திருமங்கலம் ஆகிய இடங்களில் 2 வாரத்தில் பணிகள் முடிக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, 5 தானியங்கி நகரும் நடை மேம்பாலங்களும் திறந்து வைக்கப்படும்’’ என்றனர்.