

'பிரதமர் வேட்பாளருக்கு, ராகுல் காந்தியின் பெயர் ஒரு பெரிய ஜோக்' என்றார் ஜனதா கட்சித் தலைவரும், பாஜக தேசியத் தலைவருமான சுப்ரமணியன் சுவாமி.
கோவையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “2-ஜி யில் பெரிய அளவில் ஊழல் நடந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், திமுக இரண்டும் சேர்ந்து முடிவு செய்து, எல்லா பலியையும் ஆ.ராசா தலையில் போட்டுத் தப்பப் பார்க்கின்றனர்.
மத்தியில் புது ஆட்சி அடுத்த ஆண்டு வரும். 2-ஜி ஊழலில், யாரெல்லாம் குற்றவாளிகளோ அவர்களது பெயர்களை இந்த வழக்கில் நிச்சயம் சேர்ப்போம். முக்கியமாக, சிதம்பரம், சோனியா காந்தி பெயரை சேர்ப்போம். அவர்களைத் தப்ப விடமாட்டோம்.
அமெரிக்க கப்பல், ஆயுதங்களை வைத்துக் கொண்டு எப்படி வந்தது, பாதுகாப்புப் படையினர் என்ன செய்து கொண்டிருந்தனர்? இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இத்தாலி வீரர்கள் மீது எவ்வாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேனோ, அதேபோல் அமெரிக்க கப்பல் மீதும் வழக்குத் தொடருவேன்” என்றார்.
ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சி பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்துவது குறித்து கேட்டதற்கு, “பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி நியமிக்கப்படும் அளவிற்கு, அவருக்குத் தகுதி இல்லை. அவர் நியமிக்கப்பட்டாலும் பிரச்சினை இல்லை.
பிரதமர் வேட்பாளராக அவர் நியமிக்கப்பட்டால், நாங்கள் தேர்தல் வேலை செய்யாமல், வீட்டில் போய் தூங்கி விடுவோம். ராகுல் காந்தி மீது மக்கள் வெறுப்புடன் உள்ளனர். பிரதமர் வேட்பாளருக்கு ராகுல் காந்தியின் பெயர் பெரிய ஜோக்” என்றார் சுப்பிரமணியன் சுவாமி.
கூட்டணி விவகாரம்
மேலும், “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பட்ட பெரும்பான்மை கிடைக்கும். இது மக்களின் முடிவு. 1977ல் ஜனதா கட்சிக்கு எவ்வாறு தனிப்பட்ட பெரும்பான்மை கிடைத்ததோ, அந்த அளவு பெரும்பான்மை வரும் தேர்தலிலும் கிடைக்கும்” என்றார்.
அதிமுகவுடன் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “ராமர் பாலத்தை உடைக்க நினைக்கும் கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம். ஜெயலலிதா ராமர் சேது விவாகரத்தில் உதவி செய்தார். கூட்டணி வைப்பது பற்றி ஜெயலலிதா முடிவு செய்ய வேண்டும்” என்றார்.
மீனவர் பிரச்சினை
இலங்கை படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, தாக்கப்படுவது குறித்து கேட்டபோது, “நமது மீனவர்கள் எல்லா இடங்களிலும் பாதிக்கப்படுகின்றனர். கத்தார், பாகிஸ்தான், இலங்கை ஆகிய இடங்களிலும் தாக்கப்படுகின்றனர்.
தமிழக மீனவர்களை முதலாளிகள் சிலர் பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். எல்லை மீறும் மீனவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுவிக்கிறோம் என இலங்கை அதிபர், நான் கேட்டபோது தெரிவித்தார்.
எனவே, கைது செய்யப்பட்டு நீண்ட நாள்கள் இலங்கையில் உள்ள மீனவர்களின் பெயர் பட்டியலைக் கொடுங்கள். இலங்கை அதிபரிடம் பேசி, அவர்களை விடுவிக்கிறேன்” என்றார் சுப்பிரமணியன் சுவாமி.