

சத்யம், உட்லண்ட்ஸ் திரையரங்குகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் உண்மைக் குற்றவாளிகளை சிறைப்படுத்தி, அப்பாவிகளை விடுதலை செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "அண்மையில் சென்னை சத்யம், உட்லண்ட்ஸ் ஆகிய திரையரங்குகள் மீது கல்வீச்சு நடந்துள்ளது. இதனால் அத்திரையரங்குகளின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. இதனையொட்டி வழக்குப் பதிவு செய்த சென்னை மாநகரக் காவல்துறை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 5 பேர் மற்றும் கல்லூரி மாணவர்கள் 3 பேர் என 8 பேரைக் கைது செய்து சிறைப்படுத்தியிருக்கிறது.
இச்சம்பவத்தில் தொடர்பில்லாத நபர்களைக் கைது செய்தது மட்டுமில்லாமல் கைது செய்த இளைஞர்களை, குறிப்பாக மாணவர்களை இழிவுபடுத்தும் வகையில் தாறுமாறாகப் பேசியும் கடுமையாகத் தாக்கியும் வதைத்துள்ளனர்.
அத்துடன், மேலும் சிலரைத் தேடுகிறோம் என்கிற பெயரில் மாணவர்களின் இல்லங்களுக்கும் விடுதிகளுக்கும் தேடிச் சென்று காவல்துறையினர் அச்சுறுத்தி வருகின்றனர். இதனால் அவர்களின் குடும்பத்தினர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யக் கூடாது என நாம் வாதிடவில்லை. ஆனால், குற்றத்திற்குத் தொடர்பில்லாதவர்களைக் கைது செய்து அவமதிக்கும் வகையில் நடத்துவதும், தாக்குவதும் எந்த வகையில் சட்டம் அனுமதிக்கிறது என்று விளங்கவில்லை. மேலும், கல்லூரி மாணவர்களின் அல்லது இளைஞர்களின் பெற்றோர் மற்றும் உற்றார்-உறவினர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்வதற்கு எந்தச் சட்டம் அதிகாரம் அளிக்கிறது என்றும் விளங்கவில்லை.காவல்துறையின் கண்மூடித்தனமான இந்த நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
திரையரங்குகள் மீதான தாக்குதலில் தொடர்பில்லாத நபர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கும் காவல்துறை உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துச் சிறைப்படுத்த வேண்டுமெனவும், கைது செய்யப்பட்ட அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், அவர்கள் மீது தொடரப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.