பள்ளிக்கரணை அருகே பரிதாபம்: 2 சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

பள்ளிக்கரணை அருகே பரிதாபம்: 2 சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு
Updated on
1 min read

பள்ளிக்கரணை அருகே கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.

பள்ளிக்கரணை அருகே உள்ள ஒட்டியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கோபால் மகன் சர்வின் (எ) சபரி தாஸன்(7). இதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் அஸ்வின் கணேஷ் (7). இருவரும் இதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தனர்.

நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பியுள்ளனர். பின்னர் விளையாடுவதற்காக நண் பர்கள் சிலருடன் அப் பகுதியில் உள்ள பொதுக் கிணறு ஒன்றின் அருகே சென்றுள்ளனர்.

அந்த பொதுக் கிணறு ஊராட்சி நிர்வாகம் சார்பில் மக்கள் பயன் பாட்டுக்காக தோண்டப்பட்டது. பின்னர் சில பிரச்சினைகளால் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் அப்படியே விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சபரிதாஸன், அஸ்வின் கணேஷ் இருவரும் தவறி கிணற்றில் விழுந்துள்ளனர். இதைப் பார்த்ததும் மற்ற சிறுவர்கள் பயத்தில் அங்கிருந்து ஓடிவிட்டனர். இரவு வெகு நேரமாகியும் சிறுவர்கள் வீடு திரும்பாததால் அவர்களின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.

அப்போது சிறுவர்கள் இருவரும் கிணற்றருகே விளையாடிக் கொண்டிருந்த விவரம் தெரிந்தது. அவர்கள் கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என்று கருதி தேடியுள்ளனர். ஆனால் சடலங்கள் கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து பள்ளிக் கரணை காவல் நிலையத்துக்கும், சிறுசேரி சிப்காட் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். காவல் துறையினர் மற்றும் 6 தீயணைப்பு வீரர்கள் வந்து நேற்று கிணற்றில் இறங்கி தேடினர். நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு இருவரது சடலங்களும் மீட்கப்பட்டன.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இது தொடர்பாக பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in