

விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்களை மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவது கடும் கண்டனத்துக்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களை மத்திய, மாநில அரசுகள் புறக்கணிப்பது கடும் கண்டனத்திற்குரியது.
வரலாறு காணாத வறட்சியின் காரணமாக, தமிழகம் என்றும் கண்டிராத பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றது. உலகிற்கே உணவளிக்கும் விவசாய பெருங்குடி மக்கள் தாங்கள் சாகுபடி செய்த பயிர்கள் கருகி சாம்பலானதைக் கண்டு தங்களுக்கு எதிர்காலம் இல்லை என்ற நிலையில் அவநம்பிக்கையின் உச்சமாக இதுவரை 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியாலும் மரணமடைந்ததை மத்திய, மாநில அரசுகள் பொருட்படுத்தவில்லை.
விவசாயத் தொழில் ஒன்றையே நம்பியுள்ள விவசாய கூலித் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் குடி பெயர்ந்து வருகின்றனர்.
மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் விதமாக தேசிய நதிநீர் ஆணையம் அமைக்க மத்திய அரசு முயல்கின்றது.
விவசாயிகள் பயிர்க் கடனை ரத்துசெய்வதற்கு மாறாக மத்திய கால கடனாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் எவ்வித பயனும் இல்லை. விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணம் மிகக் குறைவு என்பதுடன் 5 ஏக்கருக்கு மட்டுமே என அறிவித்து இருப்பது ஏற்க இயலாது. இந்நிலையில் விவசாயிகள் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். டெல்லியில் கடந்த 25 தினங்களாக வழக்கறிஞர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.
தஞ்சையில் கடந்த 10 தினங்களாக மணியரசன் தலைமையில் போராடி வருகின்றனர். சென்னை அம்பத்தூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் வே.துரைமாணிக்கம், மாநிலத் தலைவர் எஸ்.குணசேகரன் முன்னாள் எம்.எல்.ஏ தலைமையில் நேற்று முதல் தொடர் முழக்கப் போராட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டங்கள் தினசரி நடைபெற்று வருகின்றது. விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்களை மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
மத்திய, மாநில அரசுகள் தங்களின் தவறான போக்குகளை கைவிட வேண்டும். அறவழியில், அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களை அலட்சியப்படுத்தாமல், பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வரவேண்டும், இல்லையெனில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான போராட்டங்கள் மேலும், மேலும் தீவிரமடைவது தவிர்க்க இயலாத ஒன்றாகும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.