

தாமிரபரணியிலிருந்து வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க நிரந்தரத் தடை விதிக்கக் கோரி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
மார்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று (திங்கட்கிழமை) திருநெல்வேலி, சிந்துபூந்துறை, தாமிரபரணி ஆற்றங்கரை ஆகிய பகுதிகளில் கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்க நிரந்தரத் தடை விதிக்கக் கோரி சத்தியாக்கிரக முறையில் போராட்டம் நடைபெற்றது.
இப்போரட்டத்தில் மார்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் உ.வாசுகி, கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சுமார் 1000 பேர் கலந்துகொண்ட இப்போரட்டத்தில் பங்கேற்ற பிருந்தா காரத், "மக்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்துகின்றன. எந்த திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் அனுமதியை மத்திய, மாநில அரசுகள் கேட்பதில்லை. இயற்கை வளத்தை மக்களின் அனுமதி இல்லாமல் எடுக்கக் கூடாது. இதற்கு தேவையான சட்டத்தை இயற்ற வேண்டும். தாமிரபரணி தண்ணீரை பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு வழங்குவதை நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.