மேட்டூரில் பார்வை பாதிக்கப்பட்ட 19 பேருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை: செலவை அரசே ஏற்கிறது

மேட்டூரில் பார்வை பாதிக்கப்பட்ட 19 பேருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை: செலவை அரசே ஏற்கிறது
Updated on
1 min read

மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்ததால் பார்வை பாதிக்கப்பட்ட 19 பேர் சேலம் மற்றும் கோவையில் தனியார் மருத்துவமனை களில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான மருத் துவச் செலவை அரசு ஏற்கிறது.

தேசிய பார்வையிழப்பு தடுப்பு சங்க திட்டத்தின்கீழ் மேட்டூர் அரசு மருத்துவமனையில் கடந்த 15-ம் தேதி மேட்டூர், கொளத்தூர் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த 23 பேர் கண்புரை அறுவை சிகிச்சை செய்தனர். இவர்களில் 19 பேருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மற்றும் கோவையில் உள்ள தனியார் கண் மருத்துவமனை களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட சுகாதார பணிகள் மற்றும் குடும்ப நலன் இணை இயக்குநர் (பொ) மருத்துவர் இன்பசேகரன் உத்தரவிட்டார். மேலும், இதுதொடர்பாக சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மருத்துவர் மணி தலைமையிலான உயர் மட்டக்குழுவினர் சேலத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். கூட்டத்துக்கு பின்னர் மணி கூறியதாவது:

மேட்டூர் அரசு மருத்துவமனை யில் கண்புரை அறுவை சிகிச்சை யால் பாதிக்கப்பட்ட 19 பேர் சேலம் மற்றும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு முழுமையான சிகிச்சை வழங்கப்படும். இதற்கான மருத்துவ செலவை அரசே ஏற்கும். மேலும் அறுவை சிகிச்சை பெற்ற மற்ற 4 பேரையும் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக்குப் பிறகு..

மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்கில் கிருமித்தொற்று இல்லை என்பது முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. எனினும், அறுவை சிகிச்சை அரங்கில் இருந்து மீண்டும் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதன்முடிவு வெளியானால்தான் உண்மை காரணம் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அச்சத்தால் பரிசோதனை

மேட்டூர் அரசு மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்ட பலரும் தற்போது, பரிசோதனைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து மருத்துவர் இன்பசேகரன் கூறும்போது, “மேட்டூரில் இதற்கு முன்னர் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட யாருக்கும் பாதிப்பு இல்லை. தற்போது எழுந்துள்ள பிரச்சினை காரணமாக இதற்கு முன்னர் சிகிச்சை பெற்றவர்கள் அச்சம் காரணமாக பரிசோதனைக்கு வந்துள்ளனர்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in