

ராசிபுரம் அருகே சேகோ ஆலையில் ஜவ்வரிசி உற்பத்தியில் கலப்படம் செய்ய வைக்கப்பட்டிருந்த 5 டன் மக்காச்சோள மாவை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், ஆலையின் உற்பத்திக்கும் தடைவிதித்து உத்தரவிடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பேளுக்குறிச்சி பகுதியில் சேகோ ஆலையில் மக்காச்சோளம் மாவு கலப்படம் செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு சம்பந்தப்பட்ட சேகோ ஆலையில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் கவிக்குமார் தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு செய்தனர். இவர்களுடன் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், வணிக வரித்துறையினர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, ஆலை வளாகத்தில் இருந்த லாரியில் 5 டன் மக்காச்சோள மாவு இருந்தது தெரியவந்தது. மேலும், மக்காச்சோளம் ஏற்றி வந்த லாரியில் இருந்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், கர்நாடகா மாநிலம் ஹூக்ளியில் இருந்து கும்பகோணத்திற்கு 21 டன் மாக்காச்சோள மாவு கொண்டு செல்வது போல் குறிப்பிடப்பட்டிருந்தது. தவிர, 16 டன் மக்காச்சோள மாவு ஜவ்வரிசி தயாரிப் பதற்காக சேகோ மாவில் கலந்ததும் தெரியவந்தது.
ஜவ்வரிசி தயாரிக்க மக்காச்சோள மாவு கலக்கக்கூடாது, அவ்வாறு கலந்தால் அதன் தரம், மதிப்பு குறையும் என்பதால் சம்பந்தப்பட்ட சேகோ ஆலையில் உற்பத்திக்கு தடைவிதித்து மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினர் உத்தரவிட்டனர். மேலும், 5 டன் மக்காச்சோள மாவு பறிமுதல் செய்யப்பட்டது. ஆலைக்கு சீல் வைக்க உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
கலப்படம் செய்தால் என்ன ஆகும்?
இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் கூறுகையில், ‘‘சேகோ பொருளுடன் வேறு எந்த பொருளும் கலப்படம் செய்யக்கூடாது. அவ்வாறு கலப்படம் செய்வதால் சேகோவுக்கான உரிய விலை விவசாயிகளுக்குக் கிடைக்காது. அந்த வகையில் சேகோவுடன், மக்காச்சோளம் கலப்பதால், அது சேகோ சார்ந்த பொருளே இல்லை என்றாகிவிடும். மற்றபடி உடலுக்கு எந்த தீங்கும் கிடையாது’’, என்றனர்.