

வட தமிழகத்தில் சென்னை உள்பட 20 மாவட்டங்களில் வெப்ப அலைகளின் தாக்கம் இன்று அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட 1 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த மார்ச் மாதமே எச்சரிக்கை விடுத்திருந்தது.
மேலும் தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்தது, வார்தா புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் அழிந்தது உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு தமிழகத்தில் பல நகரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில், வட தமிழகத்தில் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 20 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வெப்ப அலைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று, தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை முகமைக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளது.