

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறையும், ரூ.10 கோடி அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கூவத்தூர் சொகுசு விடுதி உள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு 4 ஆண்டுகள் சிறையும், ரூ.10 கோடி அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூர் சொகுசு விடுதிக்குள் காவல்துறை நுழைந்தது.
சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அதிமுக எம்எல்ஏக்களை, காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் பேட்டையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் கடந்த புதன்கிழமை முதல் 7 நாட்களாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 200 அதிவிரைவுப் படையைச் சார்ந்த வீரர்கள் சொகுசு விடுதிக்குள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கூவத்தூர் சொகுசு விடுதி காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.