Published : 18 Nov 2014 02:46 PM
Last Updated : 18 Nov 2014 02:46 PM

தமிழக அரசு மீது கருணாநிதி குற்றம் சுமத்துவது கேரளம், கர்நாடகத்துக்கு சாதகமாகிவிடும்: ஓ.பன்னீர்செல்வம் காட்டம்

நதிநீர்ப் பிரச்சினைகளில் தமிழக அரசின் மீது திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சுமத்துவதை, தமிழர்களுக்கு எதிராக கர்நாடகமும், கேரளமும் பயன்படுத்திடக் கூடும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காட்டமாகக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "முல்லை பெரியாறு பிரச்சனையில் தேவையின்றி அறிக்கைப் போர் தொடுத்து தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்படும் திமுக தலைவர் கருணாநிதி, 'முல்லை பெரியாறு பிரச்சனையில் கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனு - தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாக்கும் முயற்சியில் முதலமைச்சர் ஈடுபடவேண்டும்!'" என மீண்டும் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

முல்லை பெரியாறு பிரச்சனையில் தமிழர் நலனையும், தமிழக விவசாயிகளின் நலன்களையும் பாதுகாத்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான். எனவே தான், முல்லை பெரியாறு அணையில் இன்றைக்கு 141 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதைக் கண்டு பொறுக்க முடியாமல், திமுகவினாலும், தன்னாலும் சாதிக்க முடியாததை, ஏன் கனவிலும் நினைக்க முடியாததை, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சாதித்துக் காட்டிவிட்டார்களே என்ற ஆதங்கத்தில் ஒரு தரமற்ற அறிக்கையை வெளியிட்டுள்ளார் கருணாநிதி.

முல்லை பெரியாறு பிரச்சனை தொடர்பாக கருணாநிதி எவ்வளவு அறிக்கைகளை வெளியிட்டாலும், இந்தப் பிரச்சனையில் தமிழக மக்களுக்கு, குறிப்பாக 5 மாவட்ட விவசாயிகளுக்கு திமுகவும், திமுக அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசும் தொடர்ந்து துரோகம் இழைத்து வந்ததை மறைத்து விட இயலாது. 7.11.2014 அன்று கருணாநிதி பொய்யான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கைக்கு பதில் அறிக்கை ஒன்றை நான் விடுத்தேன் என்றும், ஆனால் கேரள அரசின் முயற்சிகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்றும் மீண்டும் வீண்பழி ஒன்றை சுமத்தியுள்ளார் கருணாநிதி.

அதில், முல்லை பெரியாறு அணை குறித்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்ததைக் குறிப்பிட்டு, அடுத்த மாதம் கேரள சட்டப்பேரவைக் கூட்டத்தில் முல்லை பெரியாறு நீர்மட்டத்தினை உயர்த்தும் நடவடிக்கையைத் தடுக்க சட்ட மசோதாக்களை கொண்டு வர கேரள அரசு திட்டமிட்டுள்ளது எனக் கூறி மீண்டும் தமிழகத்திற்கு வஞ்சகம் இழைத்துள்ளார்.

முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 142 அடி வரை தேக்கிவிடக் கூடாது, அவ்வாறு தேக்கிவிட்டால் 5 மாவட்ட விவசாயிகளிடம் தனது மாய்மாலம் எதுவும் எடுபடாது என்பதால், புதிய சட்ட மசோதாக்களை கேரள அரசு கொண்டு வராதா, அதன் மூலம் தான் அரசியல் ஆதாயம் தேட இயலாதா என்ற நப்பாசை தான் இதில் தெரிகிறது.

மேலும், இப்பிரச்சனை தொடர்பாக பிரதமருக்கு இது பற்றி கடிதம் ஒன்றை எழுதியதோடு தன் கடமை முடிந்து விட்டதாக நான் இருந்து விட்டேன் என்ற ஒரு பொய்யை இடையே அவிழ்த்து விட்டிருக்கிறார் கருணாநிதி. முல்லை பெரியாறு அணையில் முதல் கட்டமாக 142 அடி வரை தண்ணீரை தேக்கிக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ள நிலையில், நீர் மேலாண்மையினைக் கருத்திற் கொண்டு முல்லை பெரியாறு அணையின் நீரின் அளவு ஒழுங்குமுறை செய்யப்பட்டு வருகிறது.

எனவே, இது தொடர்பாக பாரதப் பிரதமருக்கு தற்போது எந்தவித கடிதமும் எழுத வேண்டிய அவசியம் இல்லை. உச்ச நீதிமன்ற ஆணையை நடைமுறைப்படுத்துவது அனைத்து தரப்பினரின் கடமையாகும். இதை கருணாநிதி புரிந்து கொள்ள வேண்டும். இது குறித்து பாரதப் பிரதமருக்கு தற்போது கடிதம் எதுவும் எழுதப்படவில்லை.

ஏனெனில், முல்லை பெரியாறு தாவா தீர்க்கப்பட்ட ஒன்று. நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றமான, உச்ச நீதிமன்றத்திலேயே தமிழக மக்களுக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்றுத் தந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. எனவே, இந்த தீர்ப்புக்கு மேலும் கேரள அரசு எதுவும் செய்திட இயலும் என்ற ஒரு வீணான அச்சத்தை கருணாநிதி ஏற்படுத்த முயன்றால் முல்லை பெரியாறு நீரை நம்பியுள்ள ஐந்து மாவட்ட விவசாய பெருங்குடி மக்கள் அவரை மன்னிக்க மாட்டார்கள்.

ஒவ்வொரு பிரச்சனையிலும் அந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அதற்கு உரிய நடவடிக்கைகளை புரட்சித் தலைவி அம்மா அவர்களும், அவர்களது வழியில் செயல்படும் அஇஅதிமுக அரசும் மேற்கொண்டு வருகிறது.

முன்பு, முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தான் முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த காங்கிரஸ் அரசை கருணாநிதி ஏன் அப்போது வற்புறுத்தவில்லை?

இது போன்றே, இலங்கை தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர் பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார். முல்லை பெரியாறு அணையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, நீர் தேக்கி வைப்பதற்கு இது போன்ற தீர்மானங்கள் இன்றைய சூழ்நிலையில் அவசியமற்றதாகும்.

ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரச்சனையான முல்லை பெரியாறு பிரச்சனைக்கு திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி விடை கண்ட அதிமேதாவி கருணாநிதியின் அறிவுரை இந்த அரசுக்கு தேவையில்லை என்பதை அவருக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

கருணாநிதி தனது அறிக்கையில் கேரள அரசின் முயற்சிகள் பற்றி எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை என்றும், உச்ச நீதிமன்றத்தில் கேவியட் தாக்கல் செய்வது பற்றி முடிவு செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். கேவியட் மனு என்றால் என்ன என்பது பற்றி கருணாநிதிக்கு ஒன்றுமே தெரியாது என்னும் தனது அறியாமையைத் தான் அவர் இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், முல்லை பெரியாறு பிரச்சனை குறித்து உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு ஏற்கெனவே தாக்கல் செய்த சீராய்வு மனு பற்றியும் தனக்கு எதுவும் தெரியாது என்றும் வெளிப்படுத்தியுள்ளார்.

கேவியட் போன்ற சட்ட நுணுக்கங்கள் பற்றி எதுவும் தெரியாமல், அதைப் பற்றி அறிவுரைகள் வழங்குவதை கருணாநிதி இனி மேலாவது நிறுத்திக் கொள்வது அவருக்கும் நல்லது; நாட்டு மக்களுக்கும் நல்லது.

காவிரி பிரச்சினை

இதே போன்று, காவிரியின் குறுக்கே கர்நாடகா அணைக் கட்டுவதை தடுக்க முயற்சிக்கவில்லை என்று தமிழக அரசின் மீது அந்த அறிக்கையில் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். இதற்கும் ஏற்கெனவே உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காவிரி நதிநீர் பிரச்சனை என்றாலும், முல்லை பெரியாறு அணைப் பிரச்சனை என்றாலும், ஈழத் தமிழர் பிரச்சனை என்றாலும், தமிழக மீனவர் பிரச்சனை என்றாலும், தமிழர்களின் நலன் காப்பதற்கும் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருபவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான்.

அவரது வழியில் செயல்படும் இந்த அரசின் செயல்பாட்டால், முல்லை பெரியாறு அணையில் தற்போது 141.35 அடி அளவிற்கு நீர் தேக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசால் மேகதாதுவில் அணைகள் கட்ட விருப்பம் கோரும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது தொடர்பாகவும் போதிய நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், தமிழக அரசின் மீது குற்றம் சுமத்தி அறிக்கை எதுவும் வெளியிடாமல் இருப்பதே தமிழக மக்களுக்கு கருணாநிதி செய்யக்கூடிய நன்மை என்பதை கூறி, இது போன்ற அறிக்கைகளை தமிழர்களுக்கு எதிராக கர்நாடகமும், கேரளமும் பயன்படுத்திடக் கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, 'நல்லது செய்தல் ஆற்றிராயினும், அல்லது செய்தல் ஓம்புமின்' என்ற புறநானூற்றின் வரிகளின் படி நடந்து கொள்ள வேண்டும் என கருணாநிதியை கேட்டுக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x