

இந்தியாவில் உடல் பருமனால் 40 கோடி பேர் அவதிப்பட்டு வருவதாக சிறுநீரக தினத்தில் மருத்துவ நிபுணர் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சிமிஷன் மருத்து வமனையில் உலக சிறுநீரக தினவிழா நேற்று நடைபெற்றது. ராஜாஜி அரசு மருத்துவமனை டீன் எம்.ஆர். வைரமுத்துராஜு விழாவைத் தொடங்கிவைத்தார்.
மீனாட்சிமிஷன் மருத்துவமனை எடை குறைப்பு நிபுணர் டாக்டர் ஜெகதீஷ் பேசியதாவது:
உடல் பருமனாக உள்ளவர்களின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் குறைவதாக உலக சுகாதார நிறுவன ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 28 லட்சம் மக்கள் உடல் பருமனால் மரணிக்கும் நிலை உள்ளது. இந்தியாவில் 40 கோடி பேர் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். குழந்தைகள், வளரும் பருவத்தினர் 24 கோடி பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியர்களுக்கு மரபணு பிரச்சினையால் வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்கிறது. கல்லீரலில் கொழுப்பு படியும் தன்மை, ரத்தநாள நோய்கள், சுவாசப் பிரச்சினைகள் உள்ளிட்ட நோய்களுக்கு முக்கியக் காரணம் உடல் பருமன். சீரான உணவு முறையால் உடல் பருமனைக் குறைக்க முடியும். உடல் பயிற்சியில் தீர்வு ஏற்படாத நிலையில், குடல் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து உணவு பழக்கத்தை சரிசெய்தால் உடல் பருமனை குறைக்கலாம் என்றார்.
சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் சம்பத்குமார் பேசியது: சீறுநீரக நோய்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்தலாம். காலில் வீக்கம், சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல், பசியின்மை, சோம்பல் ஆகியன சிறுநீரக நோய்களின் அறிகுறிகளாகும். ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்தால் டயாலிசிஸ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவையில்லை. சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு போன்றவற்றை கட்டுப்பட்டில் வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக. குடல்நோய் அறுவை சிகிச்சை நிபுணர் மோகன் வரவேற்றார். முதுநிலை மேலாளர் பாண்டியராஜன் நன்றி கூறினார்.