Published : 15 Mar 2017 02:26 PM
Last Updated : 15 Mar 2017 02:26 PM

ஈரான் சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 11 பேரை மீட்க நடவடிக்கை தேவை: அன்புமணி

ஈரான் சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 11 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மத்திய அரசுக்கு தமிழக ஆட்சியாளர்கள் அழுத்தம் தர வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''துபாய் நாட்டுக் கடலில் மீன் பிடித்த போது எல்லை தாண்டிச் சென்றதாக தமிழக மீனவர்கள் 11 பேரை ஈரான் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர். அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் துபாய், சவுதி அரேபியா போன்ற வளைகுடா சென்று பெரிய நிறுவனங்களில் சேர்ந்து மீன் பிடி வேலை செய்து வருகின்றனர். துபாயில் தங்கி ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடித்து வந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நம்புகுமார், பாலமுருகன், மாரிச்செல்வம், இலங்கேஸ்வரன் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் உட்பட 11 தமிழக மீனவர்கள் கடந்த 27.12.2016 கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ஈரான் கடற்படையினர் கைது செய்தனர்.

கடந்த 79 நாட்களாக ஈரான் சிறையில் வாடும் அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் கீஸ் என்ற துறைமுகத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர். அங்கு மருத்துவ வசதிகள் இல்லாததாலும், சுகாதாரக் கேடு நிலவுவதாலும், தமிழக மீனவர்கள் கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரான் சிறையில் வாடும் மீனவர்களை மீட்டுத் தரக் கோரி அவர்களின் குடும்பத்தினர் கடந்த ஜனவரி மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் அப்போதைய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அளித்தனர். மனு அளித்து 60 நாட்களாகியும் ஈரான் சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஈரான் சிறையில் வாடும் மீனவர்கள் எவரும் விருப்பத்தின் அடிப்படையில் துபாய்க்கும், பிற வளைகுடா நாடுகளுக்கும் மீன் பிடிக்கச் செல்லவில்லை. தமிழகத்தில் வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட தாக்குதல்களையும், கைது நடவடிக்கைகளையும் மேற்கொள்வதால் தான் அதிலிருந்து தப்பிக்கும் நோக்குடன் துபாய்க்கு வேலைக்கு சென்றார்கள்.

ஆனால், அங்கும் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது அவர்களின் குடும்பத்தினரை துயரத்திலும், வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல்களில் இருந்து தமிழக மீனவர்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் தவறியதால் அவர்கள் துபாய் செல்ல நேரிட்டது.

எனவே, அவர்களை மீட்டு தாயகம் அழைத்து வர வேண்டிய பொறுப்பும், கடமையும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு. அதனால் உடனடியாக வெளியுறவுத்துறை அதிகாரிகளை ஈரானுக்கு அனுப்பி, அங்குள்ள அதிகாரிகளுடம் பேச்சு நடத்தி சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மத்திய அரசுக்கு தமிழக ஆட்சியாளர்கள் அழுத்தம் தர வேண்டும்.

அத்துடன், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு, அவர்கள் விடுதலை செய்யப்படும் வரை மாதம் தலா ரூ.10,000 வீதம் தமிழக அரசு வாழ்வாதார உதவி வழங்க வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x