

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத் தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சரத்குமார் நேற்று சந்தித்துப் பேசி னார். சந்திப்பு முடிந்து வெளியில் வந்த அவர் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:
மரியாதை நிமித்தமாக முதல் வரை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தேன். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. முதல்வர் டெல்லிக்கு சென்று மத்திய அரசை வலியுறுத்தி சட்டத்தை நிறைவேற்றியுள்ளது பெருமையாக உள்ளது. முதல்வர் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
ஜல்லிக்கட்டுக்காக 2014 முதல் பலரும் போராடி வந்தாலும், மாணவர்களின் ஒற்றுமையே அதற்கு மிகப்பெரிய வலிமையைச் சேர்த்தது. மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்துள்ளது. மாணவர்களுக்கு வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பீட்டாவை தடை செய்ய வேண்டும்
பீட்டா அமைப்பு மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு உள்ளது. அவர்கள் பூனை, நாய் ஆகியவற்றை பாதுகாப்பதற்காக எடுத்துச் சென்று, அவர்களே அவற்றை கொன்று விடுகின்றனர். இதைப் பார்க்கும்போது பீட்டாவின் நோக்கம் என்ன என்பது தெரியவில்லை. பீட்டாவை தமிழகத்தில் நிச்சயமாக தடை செய்ய வேண்டும்.
திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் யாரும் பீட்டா வில் இல்லை என நடிகர் சங்கத் தலைவர் கூறியதாக தொலைக்காட்சியில் பார்த்து அறிந்து கொண்டேன்.
இவ்வாறு சரத்குமார் கூறினார்.